நகராட்சி தலைவரிடமிருந்து வெடுக்கென செல்போனை பறித்த அமைச்சர் நாசர்! என்ன காரணம் தெரியுமா?
பூமி பூஜை நடைபெறும் போது செல்போனில் என்ன பேச்சு என்றவாறு தனது கோபத்தை வெளிப்படுத்திய அமைச்சர் நாசர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நகராட்சி தலைவரிடமிருந்து அமைச்சர் நாசர் கோபத்துடன் செல்போனை பறித்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூமி பூஜை நடைபெறும் போது செல்போனில் என்ன பேச்சு என்றவாறு தனது கோபத்தை வெளிப்படுத்தினார் அமைச்சர் நாசர்.
இதனிடையே இதனை படம் பிடித்த செய்தியாளர்களிடம் ''இதை கூட எடுத்துடுங்கய்யா, எடுத்துப் போடுங்க'' என தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

அமைச்சர் நாசர்
பால்வளத்துறை அமைச்சர் நாசரை பொறுத்தவரை களப்பணியில் செயல்வீரராக திகழ்பவர். நாசரிடம் உள்ள சுறுசுறுப்பும் உழைப்பும் தான் அவரது வளர்ச்சிக்கு அடித்தளம். இப்படி பல ப்ளஸ் பாயிண்ட்கள் இருப்பினும், முன் கோபம் தான் அவரது மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் டக்கென கோபம் கொள்வதாலேயே அவர் அண்மைக்காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். நாற்காலி போடாததால் கோபத்தில் கல்லை வீசிய நிகழ்வு அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

பக்திப் பரவசம்
அதேபோல் அதிகாரிகளிடத்திலும் எள்ளும் கொள்ளுமாக கோபத்தை கொட்டுவதால் அவர்களும் இவர் மீது கடும் அதிருப்தியில் தான் இருக்கின்றனர். கோபத்தை குறைக்க முயன்றும் அவரால் அது முடியவில்லை என்பதற்கு உதாரணம் தான் நேற்றைய நிகழ்வு ஒன்று. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் நெற்றியில் திருநீறு வைத்துக் கொண்டு பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்ட அமைச்சர் நாசர் பூஜையின் போது புரோகிதர் கூறிய நடைமுறைகளை பின்பற்றினார்.

செல்போன் ஆஃப்
அப்போது அவரது அருகில் நின்று கொண்டிருந்த திருவேற்காடு நகராட்சி சேர்மன் மூர்த்தி செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அமைச்சர் நாசர், ''செல்போனை ஆஃப் பண்ணுப்பா'' என கடிந்துகொண்டார். இதையடுத்து உடனடியாக பேசுவதை நிறுத்திவிட்டு பூஜையில் கலந்துகொண்டார் அந்த நகராட்சி தலைவர். ஆனாலும் கோபம் தீராத அமைச்சர் நாசர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, நகராட்சி தலைவரிடமிருந்து கோபத்துடன் செல்போனை பறித்து வேறொருவரிடம் கொடுத்துவிட்டார்.

நாசர் விரக்தி
அமைச்சர் நாசரின் கோபத்தை கண்டும் ஆடிபோன அந்த நகராட்சி தலைவர் வாடிய முகத்துடன் பூஜையில் கலந்துகொண்டார். இதனிடையே இதனை படம் பிடித்த செய்தியாளர்களிடம் ''இதை கூட எடுத்து எடுத்துடுங்கய்யா, எடுத்துப் போடுங்க'' என தனது விரக்தியை வெளிப்படுத்தினார் அமைச்சர் நாசர்.












Click it and Unblock the Notifications