காவிரி பிரச்சனை பற்றி ரஜினி பேசவாய்ப்பில்லை.. கர்நாடகாவில் தண்ணீர் இல்லையே! சகோதரர் சத்யநாராயணராவ்
திருவண்ணாமலை: தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகிறது. காவிரி பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுப்பாரா? என்ற கேள்விக்கு அவரது சகோதரர் சத்யநாராயணராவ் பரபரப்பான பதிலை அளித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே நீண்டகாலமாக காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை என்பது இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த மேலாண்மை ஆணையத்தின் கண்காணிப்பில் காவிரியில் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
ஆனால் போதிய மழை இல்லை எனக்கூறி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் உள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் டெல்லியல் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
மேலும் தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் நீர் திறந்து விடப்படவில்லை. தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அவசர அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் போதிய மழையின்மையால் கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை உள்ளது. இதறனால் தமிழகத்துக்கு நீர் திறக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்த பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையாவும் அதையே தெரிவித்தார்.
இதுபற்றி அவர் ‛‛கர்நாடகாவில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. கடந்த 123ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்தஅளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளும் இந்த ஆண்டுமுழு கொள்ளளவை எட்டவில்லை.
அணைகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருப்பதால் தமிழகத்தின் பாசனத்துக்கு நீர் திறந்துவிட முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது. இதுபற்றி உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எடுத்துரைக்க முடிவு செய்துள்ளோம். மேலும் தொழில்நுட்ப குழுவை கர்நாடகா அனுப்பி வைக்கவும் கோரிக்கை வைக்க இருக்கிறோம்'' என்றார்.
இந்நிலையில் தான் திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் தரிசனம் செய்தார். அதன்பிறகு அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர். அப்போது காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுப்பாரா? என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சத்யநாராயணராவ், ‛‛அதுபற்றி அரசியல்வாதிகள் பேசுவார்கள். இவருக்கு அதில் சம்பந்தம் இல்லை. பிரச்சனை முடிவுக்கு வரும். கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications