4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை.. கொள்ளையர்களின் பலே கைவரிசை! திருவண்ணாமலையில் ஷாக்
இந்த கொள்ளை சம்பவங்களிலும் கேஸ் வெல்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையின் நகர் பகுதியில் பரபரப்பான ஆள் நடமாட்டம் கொண்ட இடத்தில் இருந்த எஸ்பிஐ ஏடிஎம் வங்கியிலிருந்து சுமார் ரூ.33 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல மாவட்டம் முழுவதும் 4 வங்கிகளிலும் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதி பரபரப்பான மக்கள் நடமாட்டம் கொண்ட இடமாகும். இப்படி இருக்கையில் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்று இந்த ஏடிஎம்மிலிருந்து சுமார் ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றிருக்கிறது. கொள்ளையடித்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்க கூடாது என்பதற்காக அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
அதேபோல போளூர் ரயில் நிலையம் அருகே இருந்த ஏடிஎம் இயந்திரத்திலும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதிலும் ஏடிஎம் இயந்திரம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் இரண்டு ஏடிஎம்களும் கேஸ் வெல்டிங் மூலம் திறந்து கொள்ளையடித்திருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இதனை ஒரே கும்பல்தான் செய்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் இரண்டு கொள்ளை சம்பவம்
இரண்டு ஏடிஎம்களில் மட்டும்தான் கொள்ளை சம்பவம் நடந்ததாக நினைத்துக்கொண்டிருந்த நிலையில், காவல்துறையினருக்கு மேலும் சில ஏடிஎம்களிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அதாவது, தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம்மிலும், கலசப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இருந்த ஏடிஎம்மிலும் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த அனைத்து கொள்ளையும் ஒரே குழுவினரால்தான் செய்யப்பட்டிருக்கும் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். அதேபோல விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தீ வைத்த கொள்ளையர்கள்
இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இரவு ரோந்து பணியில் இருந்த எங்களுக்கு மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஏடிஎம் தீப்பற்றி எரிவதாக முதலில் அழைப்பு வந்தது. நாங்கள் அங்கு தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து சென்று தீயை அணைத்துக்கொண்டிருந்தோம். அதற்குள் மற்றொரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசிய நபர் போளூர் ரயில் நிலையம் அருகே இருந்த ஏடிஎம் தீப்பிடித்துள்ளதாக கூறினார். எனவே அந்த பகுதிக்கு மற்றொரு தீயணைப்பு துறை வாகனத்தை அனுப்பி வைத்தோம். இப்படியே 4 ஏடிஎம்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

விசாரணை
தீயை அணைத்த பின்னர்தான் ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டிப்பதை கண்டுபிடித்தோம். சொல்லி வைத்தார்போல தீ பற்றி எரிந்த 4 ஏடிஎம்களும் உடைக்கப்பட்டுள்ளன. இதில் பணம் ஏதும் இருக்கவில்லை. எனவே இது தீ விபத்து இல்லையென்றும், திட்டமிட்ட கொள்ளை சம்பவம் என்றும் தெரியவந்தது. கொள்ளையர்கள் கேஸ் கட்டர் கொண்டு வெல்டிங் செய்து ஏடிஎம்களை உடைத்து அதன் பின்னர் கொள்ளையடித்துள்ளனர். இதனை ஒரே கொள்ளை கும்பல் தான் செய்திருக்க வேண்டும். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.

சிசிடிவி சேதம்
இந்த 4 ஏடிஎம்களிலும் சேர்த்து சுமார் ரூ.75 லட்சத்திற்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கொள்ளைக்கு பின் தீ வைக்கப்பட்டதில் சிசிடிவி கேமிரா மற்றும் ஹார்ட் டிஸ்குகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவே கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. இதனையடுத்து ஏடிஎம்க்கு அருகில் இருந்த சிசிடிவி கேமிராக்களை கொண்டு கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications