வந்தவாசி திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை.. திருவண்ணாமலை கோர்ட் அதிரடி உத்தரவு
திருவண்ணாமலை: வந்தவாசி திமுக முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. நிலப் பிரச்சினை தொடர்பான வழக்கில் கமலக்கண்ணன் உள்பட மேலும் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பெரிய செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 48). இவர் ஊராட்சி அலுவலகத்தில் மோட்டார் ஆபரேட்டராக பணி செய்து வந்தார். இவரது மனைவி பொன்னி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர்.

நில பிரச்சினையில் தகராறு
இந்த நிலையில் முனுசாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள், இருசப்பன் ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து இருக்கிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி நில பிரச்சனை தொடர்பாக பெருமாள் மற்றும் இருசப்பனுக்கு தெரிந்தவர்கள் சிலர் முருகசாமியிடம் பிரச்சினை செய்துள்ளனர்.
அதாவது வந்தவாசி தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏவான கமலக்கண்ணன் மற்றும் மதியழகன், நந்தகோபால், துரைமுருகன், இருசப்பன் மகன் சுதாகரன் ஆகியோர் முனுசாமியிடம் தகராறு செய்து இருக்கிறார்கள். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது.
7 பேரும் கைது
ஒரு கட்டத்தில் முனுசாமி, அவரது மனைவி பொன்னி மற்றும் அக்கா அஞ்சலிதேவி ஆகியோரை 7 பேரும் சேர்ந்து தாக்கத் தொடங்கினர். கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் அவர்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் முனுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக பொன்னி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன், மதியழகன், நந்தகோபால், இருசப்பன், பெருமாள், சுதாகரன், துரைமுருகன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதி மதுசூதனன், அவர்கள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
நிலப் பிரச்சனை காரணமாக முனுசாமியை வெட்டி கொன்ற மதியழகன், நந்தகோபால், இருசப்பன், பெருமாள், சுதாகரன், கமலக்கண்ணன், துரைமுருகன் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் 7 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications