திருப்பூர் உழவர் சந்தை மொத்தமும் ஹேப்பி.. ஒரே நாளில் லட்சாதிபதியான தக்காளி விவசாயி
திருப்பூர்: தக்காளி விவசாயிகளின் காலம் இது.. தக்காளி பயிரிட்ட அத்தனை விவசாயிகளும் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வர்களாகவும் மாறி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.1½ லட்சத்துக்கு தக்காளி விற்பனை செய்து சந்தோஷமாக வீடு திரும்பி உள்ளார் விவசாயி ஒருவர்.
தக்காளி விலை கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஏறத்தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாகவே தக்காளி விலை சதம் அடித்தபடியே விற்பனையாகி வருகிறது.

குறிப்பாக கடந்த 30 நாட்களாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு கீழ் வரவே இல்லை. அண்மையில் தக்காளி விலை 140 ரூபாயில் இருந்து தற்போது விலை கடுமையாக உயர்ந்து 180 ரூபாய் ஆகி உள்ளது. சில்லறை விற்பனையில் 200 ரூபாய் என்ற அளவில் தாண்டி உள்ளது. இதனால் தக்காளி தங்கத்திற்கு நிகரான மதிப்பிற்கு இன்று உயர்ந்துள்ளது.
தக்காளி விலை இப்படி தாறுமாறாக உயரக் காரணம் என்ன என்று பார்த்தால் பருவ நிலை மாறுபாடு தான். மே மற்றும் ஜூன் மாதம் வழக்கதை விட அதிகமா வெயில் மற்றும் பருவ மழை தாமதம் போன்ற காரணங்களால் தக்காளி விலை நாடு முழுவதுமே பாதித்தது. இதுவே தக்காளி விலை உயர காரணம் ஆகும்.
இதுமட்டும் காரணம் அல்ல, தக்காளிக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உரிய விலை கிடைக்காத காரணத்தால் பல விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை நிறுத்திவிட்டார்கள் இதுவும் தக்காளி விலை உயர காரணம் ஆகி உள்ளது. தக்காளி விளைச்சல் பாதிப்பு , போதிய அளவு பயிரிடாதது போன்ற காரணங்களால் இப்போது தக்காளி விலை 200 ரூபாயை தொட்டிருக்கிறது.
விலை இப்படி தாறுமாறாக உயர்ந்த காரணத்தால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலை பொருட்படுத்தாமல் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் அத்தனை பேரும் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் ஆகி உள்ளார்கள். தக்காளியை 10 ஏக்கருக்கு பயிரிட்டு இருந்தால் நிச்சயம் அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பார்கள். யாரெல்லாம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தக்காளி போட்டார்களோ அவர்கள் அத்தனை பேரும் இன்று கோடீஸ்வரர்கள் அல்லது லட்சாதிபதியாகவே இருப்பார்கள்.
திருப்பூரில் விவசாயி ஒருவர் ஒரு நாளில் லட்சாதிபதியாகி உள்ளார். திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே வடக்கு உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஞாயிறு அன்று தக்காளி விலை ரூ.115 என்று நிர்ணயிக்கப்பட்டது.
இந்த உழவர் சந்தைக்கு சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி பெரியகுரும்பபாளையம் வலையன்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி திருமூர்த்தி என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த தக்காளியை கொண்டு வந்திருந்தார். ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார்.
திருமூர்த்தி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் 5,500 தக்காளி நாற்றுக்கள் நடவு செய்திருக்கிறார். தக்காளி நாற்று ஒன்று ரூ.1-க்கு (ஒரு ரூபாய்) அவினாசி பாளையத்திலிருந்து வாங்கி வந்து நாற்றுகளை நட்டிருக்கிறார் செடிகளை பராமரிக்க ஏக்கருக்கு சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறார்.
அவர் அன்றாடம் விளைந்த தக்காளியை தினசரி திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்திருக்கிறார். கடந்த ஞாயிறு அன்று மட்டும் 1,300 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஒரு கிலோ தக்காளி 115 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு,அவருக்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கிடைத்துள்ளது. 10 நாட்கள் அவர் இதேபோல் அறுவடை செய்தால் 10 முதல் 15 லட்சம் ரூபாய் அவரை அவருக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
ஒரு காலத்தில் தக்காளி தன்னை பயிரிட்ட அத்தனை பேரையும் கஷ்டப்படுத்தியது. விலை இல்லாததால் அறுவடையே செய்யாமல் டிராக்டரை வைத்து உழுத விவசாயிகளும் இருக்கிறார்கள். அப்படித்தான் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. ஆனால் காலம் அப்படியே இல்லை. தக்காளிக்கும் காலம் வந்துள்ளது.
தக்காளி மட்டுமல்ல சின்ன வெங்காயம் போட்ட விவசாயிகளும் நிச்சயம் கோடீஸ்வரர்களாகத்தான் இருப்பார்கள். அதன் விலை 150 ரூபாய் ஆகவே நீண்ட காலமாக இருக்கிறது. தக்காளி போல் சின்ன வெங்காயம் எல்லா இடங்களிலும் பயிராவது இல்லை. தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படும். அந்த வகையில் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த முறை நிச்சயம் மிகப்பெரிய லாபம் கிடைத்திருக்கும்.












Click it and Unblock the Notifications