என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்
திருப்பூர்: தொண்டர்கள் இருக்கும் வரை தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். மக்களவைத் தேர்தல் முடிவு எதிர்பாராத வகையில் வந்ததை அடுத்து அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் வரிசையாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், நிர்வாகிகளை தக்கவைக்கவும் தினகரன் மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அந்தவகையில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் மண்டபம் முழுவதும் அமமுக தொண்டர்கள் நிரம்பி காணப்பட்டனர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகி சேலஞ்சர் துரை ஆகியோர் சகிதம் மேடைக்கு வந்த தினகரன் வழக்கமான தனது புன்னகையை உதிர்த்தார். அதைப்பார்த்து அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இதனால் உற்சாக நிலையில் காணப்பட்டார் தினகரன். பின்னர் அதே உற்சாகத்தோடு மைக் பிடித்த டிடிவி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை பற்றி ஒரு பிடிபிடித்தார். மேலும், அமமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தன்னை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது என்றும், டிடிவி என்ற பெயரை கேட்டாலே சிலர் பயந்து நடுங்குவதாகவும் பேசினார்.
சசிகலா சிறைக்கு சென்று மூன்று வருடங்கள் ஆகின்றன, ஆனால் இதுவரை அவரால் பதவிக்கு வந்தவர்கள் அவரை சந்திக்க செல்லவில்லை என்றும், சசிகலா வெளியே வந்தால் அம்மாவின் தொண்டர்களை அவமதித்தவர்களுடன் நிச்சயம் சேரமாட்டார் என உறுதியளித்தார். மேலும், விரைவில் அமமுகவிற்கு நிலையான சின்னம் கிடைத்துவிடும் என தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.












Click it and Unblock the Notifications