கொரோனா சிகிச்சை மையம், கார் ஆம்புலன்ஸ், பணி நியமனம்.. திருப்பூரில் அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை கொண்ட கொரோனா கூடுதல் சிறப்புச் சிகிச்சை மையத்தைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக 35 ஆயிரம் வரை சென்றது.

இதன் காரணமாக மாநிலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கிற்கு பிறகும்கூட திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..
இந்தச் சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தன்னார்வலர்கள் உதவியுடன் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வசதியுடன் செயல்படக்கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா கூடுதல் சிகிச்சை மையத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வசதியாக கார் ஆம்புலன்ஸ் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் , அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், திருப்பூர் எம்பி சுப்பராயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications