ஆர்.டி.மாரியப்பன் பதவி விலகல்! போர்க்கொடி உயர்த்தும் திருப்பூர் மதிமுகவினர்! பின்னணி என்ன?
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த ஆர்.டி.மாரியப்பன் உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அவர் வகித்த இடத்துக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது.
ஆர்.டி.மாரியப்பனின் உறவினரான சிங்காரவேலு மதிமுகவில் மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்திய நிலையில் துரை வைகோ தனது ஆதரவாளர்களை திருப்பூர் வடக்கு, தெற்கு என பிரித்து மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ளார்.
இதனால் இது தொடர்பான பஞ்சாயத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரை சென்றிருக்கிறது.

மதிமுக
மதிமுகவில் திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் அக்கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினராகவும் இருந்தவர் ஆர்.டி.மாரியப்பன். வைகோ கட்சி தொடங்கிய காலம் தொட்டு அவருடன் ஒன்றாக பயணித்தவர். திமுக பல முறை அழைப்பு விடுத்தும் அதில் இணைய மறுத்து கொள்கைக்காக வைகோவுடன் நின்றவர். இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட ஆர்.டி.மாரியப்பன், வயோதிகம் காரணமாக கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

திருப்பூர் மாவட்டம்
இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தை கட்சியின் அமைப்பு ரீதியாக வடக்கு, தெற்கு என பிரித்த துரை வைகோ, கட்சிப் பணிகளில் ஆர்வமுடன் பம்பரமாக சுழலக்கூடிய தனது ஆதரவாளர்கள் இருவரை மாவட்டப் பொறுப்பாளர் ஆக்கினார். இதனை ஆர்.டி.மாரியப்பனின் உறவினரான சிங்காரவேலு உள்ளிட்ட இன்னும் சிலர் ரசிக்கவில்லை. இதனால் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருப்பதோடு திருப்பூர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் சிலர் ராஜினாமா செய்துள்ளனர்.

3 மாதம் பொறுங்க
இதனிடையே இது குறித்து தகவலறிந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒரு மூன்று மாதம் பொறுத்திருங்கள், நடவடிக்கை சரியில்லை என்றால் மாற்றிவிடுகிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால் தாம் பிடித்த முயலுக்கு 3 கால் என்பது போல் பிடிவாதம் பிடித்து வருகிறார்கள் சிலர். இதனால் வைகோவுக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே பதவி கிடைக்காத கோபத்தில் கட்சியில் கலகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதிமுக தலைமை தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.

பிரிந்தவர்கள் ஏராளம்
மு.கண்ணப்பன், திருச்சி செல்வராஜ், எல்.ஜி.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், என பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வைகோவை விட்டு பிரிந்து சென்ற நிலையிலும் மதிமுகவை இன்றுவரை உயிர்ப்புடன் அவர் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. அதனால் திருப்பூர் மாவட்டத்தில் குழப்பம் விளைப்பவர்களை பற்றி துரை வைகோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications