மத்திய அரசின் தவணைத் தொகை பெறுவதில் பிரச்சினை இருந்தால்.. திருப்பூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு
திருப்பூர்: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணைத்தொகை பெறுவதில் பிரச்சினை இருந்தால் வருகிற 31-ந் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது 20-வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைத்தல், இ-கே.ஓய்.சி. மற்றும் நில ஆவணங்களை இணைத்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாத விவசாயிகள், நேரடி பலன் பரிமாற்றம் பணி செய்ய முடியாதவர்கள், வங்கி தொடர்பான பிரச்சினை உள்ள விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று புதிய சேமிப்பு கணக்கை தொடங்கி பயன்பெறலாம். கிராம தபால் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ள செல்போன் எண் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம் ஆதார், செல்போன் எண் பதிவு செய்து ஜீரோ இருப்பு கணக்கை விவசாயிகளுக்கு உடனடியாக தொடங்க வழிவகை செய்ய உள்ளார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், பொது இ-சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களை தொடர்பு கொண்டு திட்டத்தில் இணைத்து பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சேர்ந்து பயனடையாத விடுபட்ட தகுதியுடைய விவசாயிகளுக்கும், ஏற்கனவே பதிவு செய்து பயன்பெற்று பல்வேறு காரணங்களால் தற்போது நிதியுதவி நிறுத்தப்பட்ட பயனாளிகளும் இந்த முகாமுக்கு வந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த விவசாயி மரணமடைந்திருந்தால் அவர்களது தகுதியுடைய வாரிசு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களது பெயருக்கு புதிதாக பதிவு செய்து பயன்பெறலாம்.
இறந்த பயனாளிகளின் விவரங்களை சமர்ப்பிக்காமல் இறந்த பிறகும் தவணைத்தொகை பெறப்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்தால் தவறுதலாக பெறப்பட்ட தொகை வாரிசுதாரரிடம் இருந்து வசூலிக்கப்படும்.
இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாரிசு பெயரில் மாறுதல் செய்தும் பயன்பெறலாம். வருகிற ஜூன் மாதம் விடுவிக்கப்பட உள்ள உதவித்தொகையை விடுபட்ட அனைத்து தகுதியுடைய விவசாயிகளும் பெற வசதியாக வருகிற 31-ந் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்" இவ்வாறு திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவிப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications