திருச்சி - சென்னை ஹைவேயில்.. ஆம்னி பஸ், அரசு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து.. பயணிகள் பலர் காயம்
திருச்சி: உளுந்தூர் பேட்டை அருகே இன்று அதிகாலையில் மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கி 15 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து எப்போதுமே அதிகமாக இருக்கும். நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலைகளில் சீறிப்பாய்கின்றன. குறிப்பாக வார விடுமுறையில் சொந்த ஊர் சென்ற மக்கள், நேற்று சென்னைக்கு திரும்பினர்.

இதனால், திருச்சியில் இருந்து சென்னை வரும் சாலையில் வாகனப் போக்குவரத்து இயல்பை விட சற்று அதிகமாக இருந்தது. சொந்த வாகனங்களிலும் பலர் சென்னை திரும்பி கொண்டு இருந்ததால் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் தான், உளுந்தூர் பேட்டை அருகே சென்னை நோக்கி வந்த பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.
தனியார் பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்தும் அதன்பின்னால் மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தும் மோதியது. அடுத்தடுத்த 3 பேருந்துகள் மோதிக்கொண்டதில் அரசு பேருந்து மீது மினி லாரி ஒன்றும் மோதியது. இந்த விபத்தில் 2 பேருந்துகளின் டிரைவர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர் பேட்டை அருகே மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அஜீஸ் நகர் என்ற இடத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள், சாலையின் இடது புறம் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு திருப்பி விடப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில், தான் சர்வீஸ் சாலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் கவிழ்ந்த மினி லாரியை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அங்கிருந்து மீட்டனர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது. அதிகாலையில் ஏற்பட்ட விபத்தால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். காலையில், கல்லூரிகளுக்கும் அலுவலகத்திற்கும் செல்வதற்கு திட்டமிட்டு வந்த பயணிகள், இந்த விபத்தால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications