மேயர் கனவுடன் கவுன்சிலர் பதவிக்கு வாக்கு சேகரிக்கும் Ex அமைச்சர் மகன்! சூடுபிடித்த பிரச்சாரக் களம்!
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் அதிமுக அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில் மேயர் பதவியை குறித்து காய் நகர்த்த தொடங்கியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன்.
இதனிடையே திருச்சியில் அதிமுக 5 வார்டுகளை தாண்டி வெற்றிபெற்றால் அதுவே அதிசயம் எனக் கூறி திமுகவினர் கிண்டல் அடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திருச்சி மாநகராட்சியில் 20-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு, இப்போதே மேயர் பதவியை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். அதிமுக அதிக இடங்களில் வென்றால் மேயர் பதவியையோ, துணை மேயர் பதவியையோ கைப்பற்ற வேண்டும் என்பது அவரது கனவு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

வீடு வீடாக
திருச்சி 20-வது வார்டில் வீடு வீடாக செல்லும் ஜவஹர்லால் நேரு, குறைந்தது ஒரு நிமிடமாவது நின்று பேசி வாக்கு சேகரித்து வருகிறார். நோட்டீஸை கொடுத்துவிட்டு வணக்கம் வைத்துவிட்டு நடையை கட்டாமல், தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்காளர் தவறாமல் விளக்கிக் கூறுகிறார். சாதி ரீதியிலான ஓட்டுக்களும், கட்சி ரீதியிலான ஓட்டுக்களும் தன்னை கரையேற்றி விடும் என்ற நம்பிக்கையில் உள்ள அவர் எப்படியும் மேயராகிவிடலாம் என எண்ணுகிறார்.

திமுகவினர் கிண்டல்
இதனிடையே திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் அதிமுக 5 வார்டுகளை தாண்டி வெற்றிபெற்றால் அதுவே அதிசயம் என்றும் இந்த நிலையில் அதிமுகவால் எப்படி மேயர் பதவியை கைப்பற்ற முடியும் எனவும் கிண்டல் அடிக்கின்றனர் திமுகவினர். திருச்சியை பொறுத்தவரை திமுகவே அதிக இடங்களில் வென்று மேயர் பதவியை கைப்பற்றும் என பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

ஓ.பி.எஸ். பிரச்சாரம்
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருச்சியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஓ.பி.எஸ்.க்கு ஜவஹர்லால் நேருவை ஏற்கனவே தெரியும் என்றாலும் கூட மீண்டும் அவரிடம் தனது மகனை அறிமுகம் செய்து வைத்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.












Click it and Unblock the Notifications