பகல் கனவு காணும் அண்ணாமலை.. அவர் ஆசை எப்போதும் நிறைவேறாது.. அமைச்சர் சேகர்பாபு
திருச்சி: திமுக ஆட்சியை அகற்றுவது குறித்து அண்ணாமலை பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். அவருடைய ஆசை எப்போதும் நிறைவேறாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், பாஜக மாநிலத் தலைவராக எனது இல்லத்துக்கு வெளியே நின்று, சாட்டையால் என்னை நான் 6 முறை அடித்துக் கொள்ளப் போகிறேன். நாளையில் இருந்து திமுக ஆட்சியில் இருந்து அகற்றும்வரை, நான் செருப்பு அணியமாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், திமுக அரசை கண்டித்து இன்று காலை 10 மணியளவில், தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. பச்சை வேட்டி அணிந்து, சட்டை இல்லாமல், தேங்காய் நாறால் செய்யப்பட்ட சாட்டையால், கோவையில் உள்ள தன்னுடைய இல்லத்தின் முன்பு, 8 முறை தன்னை தானே அடித்து கொண்டார்.
இதுகுறித்து, திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: 48 நாட்கள் என்பது முழு மண்டலத்துக்குண்டான நாட்கள். வேறு ஏதாவது நேர்த்திக் கடனுக்காக 48 நாட்கள் என்று அறிவித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பேசுவது, மாற்றி மாற்றி சவால் விடுவது, குறைகள் சொல்வதை அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று முதலில் கூறியிருந்தார். அது நிறைவேறாத ஆசை. நிச்சயமாக பார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் திமுகதான் தமிழகத்தில் ஆட்சி செய்யும். திராவிட மாடல் முதலமைச்சர் ஸ்டாலினால் அரும்பெரும் திட்டங்கள் மகளிரிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறோம். கொளத்தூர் தொகுதியில் அவர் பயணம் செய்யும்போது அவரை பாராட்டாத மக்களே இல்லை. வசைபாடியவர்கள் கூட இன்றைக்கு வாழ்த்து கூறுகின்றனர்.
நேற்று அண்ணாமலை திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று கூறியிருந்தவர், அதே பேட்டியிலேயே 48 நாட்கள் என்று குறைத்து விட்டார். நிச்சயமாக அவர் காணுகின்ற கனவு பகல் கனவாகத்தான் இருக்கும். எண்ணுகின்ற செயல்கள் மணலிலே கயிறு திரிப்பதற்கு சமமாகத்தான் அமையும். எனவே, திராவிட மாடல் ஆட்சியில் குறையாக எதுவும் சொல்ல முடியாது என்பதால் இப்படிப்பட்ட சவால்களை எல்லாம் அவர் கூறுகின்றார்.
திருக்கோயில்களில் உள்ள 28 யானைகளுக்கும் முறையாக 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வனத்துறையைச் சார்ந்தவர்களோடு திருக்கோயில் யானைகளைப் பிடித்து பராமரிப்பு பணிகள் மேறகொள்ளப்பட்டு வருகிறது. யானைகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் வகையில் 28 யானைகளுக்கும் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
28 யானைகளுக்கும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சரிவிகித உணவு வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் யானைகளுக்கான புத்துணர்ச்சிக்கும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும். யானைகள் நலனைக் காக்கின்ற அரசு திமுக என்பதனால்தான் மறைந்த தெய்வமாகிவிட்ட யானைகளுக்கு கூட மணிமண்டபங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
சுமார் 10 திருக்கோயில்களில் இந்த மணிமண்டபங்கள் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான திறப்பு விழா மே அல்லது ஜூன் மாதங்களில் நடத்தப்படவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications