பக்ரீத் பண்டிகை.. ஒரே இடத்தில் 20 ஆயிரம் ஆடுகள்.. போட்டி போட்டு.. திருச்சியே மிரண்டு போச்சு!
திருச்சி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியின் படி, துக்ஹஜ் மாதம் 12வது மற்றும் கடைசி மாதமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்தை இந்த மாதத்தில் மேற்கொள்வார்கள். பக்ரீத் பண்டிகையை ஈத் அல் அதா என்றும் அழைக்கப்படுகிறது.

ஈத்-உல்-ஜுஹா ஒவ்வொரு ஆண்டும் துல் ஹிஜ்ஜாவின் 10 வது நாளில் வரும். இந்நாள் பக்ரீத் பண்டிகையாக இஸ்லாம் பின்பற்றுபவர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சவுதி அரேபியா தவிர மற்ற நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்றவை ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை திருச்சி சந்தையில் களைகட்டி உள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒத்தக்கடையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இங்கு சராசரியாக ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை ஆகும்.
ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஆடுகள், அதன் எடை, தரத்திற்கேற்ப விற்பனையாகும். இந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
அதேபோல ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் சமயபுரம் ஆட்டுச்சந்தைக்கு வருகை தருவார்கள். இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைமுன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தைக்கு சனிக்கிழமை வழக்கத்தை விட ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியில் இருந்து பல்வேறு வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்து இறக்கினார்கள். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கி சென்றனர்.ஒரு ஆடு சுமார் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.
ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாகின என்றார்.












Click it and Unblock the Notifications