மோடி விஷ்வ குரு.. கூட்டணிக்கு வாங்க! அதிமுகவில் தலையிடல.. திமுக-விசிக பிரியுது -சொல்கிறார் அண்ணாமலை
“மற்ற கட்சியின் பிரச்சனைகளில் நான் பா.ஜ.க வின் தலைவராக இருக்கும் வரை பா.ஜ.க தலையிட கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன்”
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடியை விஷ்வ குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். அ.தி.மு.க வில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது தங்கள் வேலை அல்ல என்றும், திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியே வர முடிவு செய்து விட்டார் எனவும் கூறி உள்ளார்.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "பா.ஜ.க வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து உள்ளது. அதன் காரணமாக பா.ஜ.க விற்கு அந்த மாநில மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
காங்கிரஸின் கோட்டையாக இருந்த வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் முழுவதுமாக துடைக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி. பா.ஜ.கவில் அனைவரும் உழைப்பு செய்ததால் தான் இத்தகைய வெற்றி கிடைத்துள்ளது.

ஈரோடு கிழக்கு
காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் கிடையாது. வழிநடத்துவதற்கான தலைவர்களும் இல்லை. அவர்கள் வீழ்ச்சி அடைய அதுவே காரணம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க வின் 23 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெகுமதி அல்ல இந்த வெற்றி.

திருமாவளவன்
2024 மக்களவை தேர்தல் களம் முற்றிலும் வேறுப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை மையமாக வைத்தும் நடக்கும் தேர்தல். திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியே வர முடிவு செய்து விட்டார். அவர் ஏன் ஒரு வாரமாக பிதற்றுகிறார் என தெரியவில்லை. பா.ஜ.கவிற்கு பட்டியல் இன மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

திமுக - விசிக கூட்டணி
வி.சி.கவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற தி.மு.கவும் முடிவு செய்து விட்டதைபோல் ஆரம்ப கால அறிகுறிகள் தெரிகிறது. திருமாவளவன் கோட்டை என கூறப்படும் கடலூரில் அவரது கண் முன்னாலேயே பா.ஜ.க வளர்ந்து இருக்கிறது. திருமாவளவன் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் டெபாசிட் வாங்குவதே கடினம்.

பிற கட்சிகளில் தலையீடு
யாரையும் அரவணைப்பது என் கடமையல்ல. 2021 ஆண்டுக்கு முன்பு எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது. நான் தலைவராக பொறுப்பேற்ற பின்பு ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஒரு கட்சி இன்னொரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என கூறினால் அது ஜனநாயகமாக இருக்காது. மற்ற கட்சியின் பிரச்சனைகளில் நான் பா.ஜ.க வின் தலைவராக இருக்கும் வரை பா.ஜ.க தலையிட கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன்.

அதிமுக உட்கட்சி விவகாரம்
அ.தி.மு.க வில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது எங்கள் வேலை அல்ல. பிரதமர் நரேந்திர மோடியை விஷ்வ குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். கசாபு கடை செல்வதற்கு முன் ஆட்டை பிடித்து பார்த்தது போல்தான் உதயநிதி பிரதமரை சந்தித்தது. பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி தொடர்ந்து வெற்றி பெறும் என நினைப்பது தவறு.

பாஜகவுக்கு எழுச்சி
அரசுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு இருக்கும். அதனால் தான் அ.தி.மு.க 2021 ல் தோல்வி அடைந்தது. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் 2024 லிருந்து 2026 வரை மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். 2024 தேர்தல் பா.ஜ.க விற்கானது. அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி தினமும் பா.ஜ.கவை விமர்சிக்கிறார்கள். டி.ஜி.பி ஓய்வு பெறுவதால் தமிழ்நாட்டை அமைதி பூங்கா என கூறி வருகிறார்." என்றார்.












Click it and Unblock the Notifications