‛‛பொறுப்பையாவது ஒப்படைக்கலாம்’’.. ஆயிரம் முறை சொன்னாலும் கேட்காத ஸ்டாலின்.. வருந்தும் டிஆர் பாலு
திருச்சி: முதல்வர் ஸ்டாலின் தனது உடல் தகுதியை மீறி தொடர்ந்து உழைத்து வருகிறார். ஆயிரம் முறை சொல்லியும் அவர் கேட்காமல் உள்ளார். அவர் பொறுப்புகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என திமுகவின் பொருளாளரும், எம்பியுமான டிஆர் பாலு பரபரப்பாக கூறியுள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு திமுக தயாராகி வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைவர்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசியுள்ளார். விரைவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள 29 நாடாளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். அந்த வகையில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 16ம் தேதி தொடங்கிய இந்த பொதுக்கூட்டம் இன்றுடன் முடிவடைய உள்ளது. நேற்று முன்தினம், நேற்று என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ‛பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் பொதுக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ‛பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!' என்ற பெயரில் திமுகவின் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திமுகவின் பொருளாளரும், எம்பியுமான டிஆர் பாலு பங்கேற்று பேசினார். அப்போது அவர் முதல்வர் ஸ்டாலினை நினைத்து பெருமையாக கூறியதோடு, வருத்தத்தையும் பதிவு செய்தார். இந் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இங்கு வந்துள்ள திமுக கவுன்சிலர்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் வார்டுகளில் 100 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். இதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது. வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். வீடுகளுக்கு செல்லும்போது ஓட்டு போடுகிறோம். உங்களுக்கெல்லாம் கால் வலிக்கவில்லையா? என தங்கைகள் கேட்பார்கள். ஆனால் அவர்கள் கூறுவதை அப்படியே விட்டுவிடக்கூடாது.
ஏனென்றால் ஓட்டுப்பதிவு நாளில் மதிய வேளையில் அவர்களிடம் ஓட்டு போட்டுவிட்டீர்களா? என்று கேட்டால், எல்லாரும் தான் ஓட்டு போடுறாங்களே.. நான் வந்து ஓட்டு போட்டால் தான் நீங்க ஜெயிக்க போறீங்களா.. நீங்க தான் ஜெயிச்சிருவீங்களே என சொல்வார்கள். இப்படி சொல்லும் கட்சிக்காரர்கள், சகோதரர்கள், சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களிடம் படு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் மோடியை விட மிக மோசமானவர்கள். புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது.
தலைவர் ( முதல்வர் ஸ்டாலின்) இரவு, பகலாக கஷ்டப்படுகிறார். உடலளவில் தனது தகுதிக்கு மீறி வேலை செய்து வருகிறார். நாங்களும் அமைச்சர்களாக தான் இருந்தோம். இந்த மாதிரி முதல் அமைச்சர் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. அவரிடம் ஆயிரம் முறை சொல்லிவிட்டேன். நட்பு ரீதியாகவும், கழக பொருளாளர் என்ற முறையிலும் நான் இதனை கூறிவிட்டேன். நண்பர்களும் சொல்லிவிட்டனர்.
ஆனால் அவருக்கு எப்போதும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கிறது. வேலையில் அவரது அப்பாவை (மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி) விட மோசம். அவரது அப்பா யாரையும் நம்பமாட்டார். அனைத்து வேலைகளையும் அவரே செய்வார். சரி கஷ்டப்படுங்கள் என நாங்களும் விட்டுவிட்டு செல்வோம். ஆனால் இவர் (ஸ்டாலின்) உடலளவில் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். இது நியாயம் தானா. தேவையில்லை.
ஏனெ்றால் நாங்கள் எல்லாம் இருக்கிறோம். உத்தரவு கொடுத்தால் போதும். நாங்கள் பணியை செய்து முடிப்போம். இப்போது அவர் பிறப்பித்த உத்தரவால் தான் இவ்வளவு பெரிய கூட்டம் நடத்துகிறோம். அதனால் பொறுப்புகளை ஒப்படையுங்கள். நன்றாவே நடக்கும். இதையெல்லாம் நம்பாமல் தான் பணியாற்றி கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை'' என பேசினார்.












Click it and Unblock the Notifications