திருச்சிக்கு வந்த சிறப்பு விமானம்.. மலேசியா திரும்பிய 110 பயணிகள்.. அதிரடி மீட்பு பணி!
தமிழகத்தில் காத்திருந்த மலேசியப் பயணிகள் 110 பேர் இன்று திருச்சியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் புறப்பட்டுச் சென்றனர்.
திருச்சி: தமிழகத்தில் காத்திருந்த 110 மலேசிய பயணிகள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் மலேசியா புறப்பட்டுச் சென்றனர்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, இந்தியாவைச் சேர்ந்தோர் தாயகம் திரும்ப வெளிநாடுகளில் காத்திருப்பதைப் போலவே, வெளி நாட்டுப் பயணிகள் பலரும் இந்தியாவில் காத்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் தாயகம் செல்ல காத்திருக்கிறார்கள்.

இப்படி காத்திருப்போரை அந்தந்த நாட்டு அரசுகள் சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தற்போது தாயகம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை திருச்சி விமான நிலையத்திலிருந்து 110 பேர் சிறப்பு மீட்பு விமானம் மூலம் மலேசியா புறப்பட்டுச் சென்றனர். இதற்காக மலிண்டோ நிறுவன சிறப்பு மீட்பு விமானம் காலை 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தது.
பின்னர் இங்கு தயாராக இருந்த 110 பயணிகளையும் ஏற்றிக்கொண்டு 11.15க்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. இவர்கள் முறையான சோதனைக்கு பின் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
இது குறித்த மலேசிய நாட்டைச் சேர்ந்த முத்து என்ற பெண் பயணி கூறுகையில், தமிழக அரசு எங்களுக்கு தங்குவதற்கான எல்லா வசதிகளையும் சிறப்பாக செய்திருந்தது. மலேசிய அரசும் சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்வது மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் கைக் குழந்தையுடன் செல்லும் நிலையில், 14 நாள்கள் எங்கு எப்படி தங்க வைப்பார்களோ என எண்ணும் போதுதான் சற்று பயமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications