பட்டா திருத்தம்.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. திருச்சியில் கையும் களவுமாக சிக்கிய துணை தாசில்தார்
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் தந்தையின் பெயரில் உள்ள 94 சென்ட் நிலத்திற்கான பட்டாவில் பெயர் திருத்தம் மேற்கொள்ள ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் துணை தாசில்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார், துணை தாசில்தார் ரவிக்குமாரை ஆபிஸ் வாசலிலேயே பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.
விஏஓ முதல் தாசில்தார் வரை அண்மைக்காலங்களில் பலர் அரசு சேவைகளை பெற லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டா பெயரில் திருத்தம் செய்ய லஞ்சம் கேட்பத, பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்பது, நிலத்தை அளக்க லஞ்சம் கேட்பது, மின் இணைப்பு லஞ்சம் கேட்பது, வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்பது பல அரசு சேவைகள் பெற லஞ்சம் கேட்பது இன்றும் பல அரசு அலுவலகங்களில் நடக்கிறது.

இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அரசு சேவைகளை அலையாமல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் லஞ்சம் தருவதும் நடக்கிறது.இதுதான் லஞ்சம் குறையாமல் இருக்க காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளிலேயே வருவாய் துறையில் தான் அண்மைக்காலங்களில் லஞ்சம் வாங்கியதாக அதிகமானோர் கைதாகிறார்கள்.
வருவாய் துறையில் உள்ள ஒரு சிலர் நிலங்களின் மதிப்பை பொறுத்து ஆயிரங்களில் லஞ்சம் கேட்பது தொடர்கிறததாம். சில பகுதிகளில் லட்சம் வரையிலும் லஞ்சம் கேட்பதும் தொடர்கிறதாம். இப்படி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ரசாயணம் தடவிய நோட்டுக்களை கொடுத்து கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்கிறார்கள். . அப்படித்தான் திருச்சி மாவட்டம் லால்குடியில் துணை தாசில்தார் கைதாகி உள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மோகன் என்பவர் 2002-ல் ரங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து, லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் நிலத்தை, தனது தந்தை கணேசன் பெயரில் வாங்கி இருக்கிறார்.

இந்நிலையில், அந்த பட்டாவில் நிலத்தை விற்றவர் பெயர் கிருஷ்ணசாமி என்பதற்குப் பதிலாக, கிருஷ்ணமூர்த்தி என தவறுதலாக இடம் பெற்றுள்ளது. இந்தப் பெயரை திருத்தம் செய்ய வேண்டி, கடந்த மார்ச் 5-ம் தேதி லால்குடி கோட்டாட்சியருக்கு மோகன் விண்ணப்பித்துள்ளார். இந்த மனுவை தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்து, தொடர் நடவடிக்கைக்காக லால்குடி துணை வட்டாட்சியருக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால் விண்ணப்பம் செய்து 4 மாதங்களாகியும் பெயர் திருத்தம் செய்யப்படவில்லையாம்.
இதனால், லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற மோகன், துணை தாசில்தார் ரவிக்குமாரை சந்தித்து, தனது மனு தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு ரவிக்குமார், மனுவைப் பரிந்துரை செய்து அனுப்ப ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அவ்வளவு பணம் தர இயலாது என தெரிவித்த மோகனிடம், குறைந்தது ரூ.20 ஆயிரம் தந்தால்தான் மனுவை பரிந்துரை செய்வேன் என ரவிக்குமார் கண்டிப்புடன் தெரிவித்ததாராம்..
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் அறிவுரைப்படி லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று சென்ற மோகன், ரூ.20 ஆயிரத்தை ரவிக்குமாரிடம் அளித்திருக்கிறார்கள். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் துணை தாசில்தார் ரவிக்குமாரை பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications