பச்சைக்கிளிகளை விற்பதும் வாங்குவதும் குற்றம் தெரியுமா? திருச்சியில் அகப்பட்ட 5 பேர்! 15 நாள் சிறை!
திருச்சி: பச்சைக்கிளிகளை விற்பதும் வாங்குவதும் குற்றம் எனத் தெரியாமல் திருச்சியில் அதனை விற்பனை செய்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சியின் பல்வேறு இடங்களில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து வனத்துறை அலுவலர்கள் ரகசிய சோதனையில் ஈடுபடத் தொடங்கினர். திருச்சி மலைக்கோட்டை வீதிகள், பாலக்கரை, காந்தி மார்கெட், பொன்மலை, உறையூர் என பல இடங்களில் வனத்துறை அலுவலர்கள் கடந்த 4 நாட்களாக ரோந்து சென்று கண்காணித்தனர்.

இந்நிலையில் பாலக்கரை குருவிக்காரன் தெருவில் அதிரடி சோதனை நடத்திய போது, மணிகண்டன், கார்த்தி உள்ளிட்டோர் வீடுகளில் இருந்து 108 பச்சைக்கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுதந்திரமாக பறந்து திரிய வேண்டிய கிளிகளை கூண்டுக்குள் அடைத்து அதனை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதேபோல் 30 முனியாஸ் வகை பறவைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் வனத்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூரை சேர்ந்த திரு என்பவர் தான் வலை மூலம் கிளிகளையும், முனியாஸ் பறவைகளையும் பிடித்துக் கொடுத்தது தெரியவந்தது. பின்னர் அவரையும் கைது செய்த வனத்துறையினர், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்துள்ளனர்.
இதைப் படிப்பவர்களுக்கு பச்சைக்கிளிகள் விற்பதும் வாங்குவதும் குற்றமா என்ற கேள்வி எழும். ஆம், குற்றம் என திருச்சி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் செல்லமாக வீடுகளில் கிளி வளர்க்க ஆசைப்படுவதால் தான் இது போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் பச்சைக்கிளிகள் விற்பதும் வாங்குவதும் ஜாமினில் வெளிவர முடியாத 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
மேலும், பச்சைக்கிளிகள் விற்பனை தொடர்பான தகவல் இருப்பின் பொதுமக்கள் தாராளமாக வனத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொண்டார். இதனிடையே பச்சைக்கிளிகள் விவகாரத்தில் காட்டும் ஆர்வத்தை மரக் கடத்தலை தடுத்து நிறுத்தவும் வனத்துறை அதிகாரிகள் காட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications