ஒரு பாக்கெட் மிளகாய் பொடி தான்.. பைபாஸில் பறிபோன 12 கோடி தங்கம்! நடுரோட்டில் நடந்த ஷாக் சம்பவம்!
திருச்சி: திண்டுக்கல்லில் நகையை விற்பனை செய்துவிட்டு சென்னை நோக்கிச் சென்ற, நகை வியாபாரியின் மேலாளரின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் சென்னையில் பிரபலமான ஆர்கே ஜுவல்லரியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து திண்டுக்கல் சென்ற அவர் அங்குள்ள நகை கடைகளில் ஆபரண நகைகளை விற்பனை செய்துள்ளார்.
பின்னர் விற்பனையாகாத 10 கிலோ நகைகளுடன் மூன்று பேருடன் பிரதீப் சென்னை நோக்கி காரில் சென்றிருக்கிறார். திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் சாலையில் எஸ்ஆர்எம் கல்லூரி அருகே இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க கீழவங்காரம் பிரிவு சாலையில் இறங்கி உள்ளனர்.

நகை வியாபாரி
அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த காரில் திடீரென இறங்கிய நான்கு பேர் அவர்களின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு கார் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து இரண்டு பைகளில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோவிற்கு அதிகமான தங்கத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பிரதீப் உள்ளிட்ட மூன்று பேர் கொள்ளைச் சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
தங்க நகை கொள்ளை
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதீப் மற்றும் அவரது ஊழியர்கள் அடிக்கடி சென்னையில் இருந்து திண்டுக்கல் வந்து நகைகளை விற்பனை செய்துவிட்டு மீண்டும் காரில் தங்கத்தைச் சென்னைக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதை அடுத்து பல நாட்களாக இவர்களை நோட்டமிட்ட கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிசிடிவி கேமரா
அதே நேரத்தில் நகையை இழந்த பிரதீப் உள்ளிட்ட மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சமயபுரம் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சமயபுரம் டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
12 கோடி நகை
தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் இருக்கும் எனவும் கொள்ளையர்கள் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களா? அல்லது சென்னையிலிருந்து அவர்களை பின்தொடர்ந்து வந்து கொள்ளையடித்தார்களா? எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த ஜுவல்லரியின் மேலாளர் பிரதீப் மற்றும் ஊழியர்களுக்கும் தொடர்புள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சி
அவ்வளவு தங்க நகைகள் காரில் இருக்கும் போது சாதாரணமாக சாலையோரம் காரை நிறுத்தி விட்டு இறங்கியது ஏன்? அந்த காரில் வந்தவர்களே கொள்ளை கும்பலுக்கு தகவல் கொடுத்தார்களா? என பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறுகின்றனர் போலீசார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications