சென்னை லேடி டாக்டர்.. திருச்சி மலைக்கோட்டை கோயில் படிக்கெட்டில் ஏறும் போது அப்படி ஒரு சம்பவம்.. பரபர
திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் சுவாமி தரிசனத்திற்காக சென்ற போது பெண் மருத்துவர் மோனிஷா திடீரென மயங்கி விழுந்தார். அவரை போர்வையில் டோலி போல் தூக்கி வந்து ஆசுவாசப்படுத்திய தீயணைப்புத் துறையினர், பெற்றோருடன் ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.
திருச்சியின் மிகவும் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று மலைக்கோட்டை. இது திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. இந்த மலைக்கோட்டை கோயிலை மக்கள் உச்சிப்பிள்ளையார் கோவில் என்று அழைக்கிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் என்பது 275 அடி உயர மலையின் மேல் அமைந்திருக்கிறது. இந்த மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்றும் இருக்கிறது. இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இருக்கிறது.
இந்த மலைக்கோட்டை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோவில் போன்றவற்றை தெளிவாக பார்க்க முடியும். மொத்த திருச்சி மாநகரின் அழகையும் மலைக்கோட்டை உச்சியில் இருந்து ரசிக்க முடியும்
3400 மில்லியன் வருடங்கள் பழமையான இந்த மலைக்கோட்டையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை இருக்கின்றன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இந்த மலைக்கோட்டையில் இருக்கிறது..
திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். திருச்சி மாநகரின் முக்கியமான ஆன்மீக சுற்றுலா தலமாக மலைக்கோட்டை திகழ்கிறது. இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சென்னை கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோனிஷா, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்பிபிஸ் படித்து முடித்துள்ள சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த மோனிஷா, மருத்துவ மேற்படிப்புக்கான முதுநிலை நீட் தேர்வு எழுத பெற்றோருடன் திருச்சிக்கு வந்துள்ளார்.ஆனால் திடீரென நீட் முதுநிலைத்தேர்வு கடைசி நிமிடத்தில் இந்தியா முழுவதும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர் மோனிஷா, மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் படிகளில் ஏறி சென்று கொண்டிருந்த போது,திடீரென மயங்கி விழுந்தார்.
இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு அங்குள்ளவர்கள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சுமார் 2 மணி நேரம் கழித்து வந்த தீயணைப்பு துறையினர், மயங்கி கிடந்த மோனிஷாவை, போர்வை ஒன்றில் டோலி போல உட்கார வைத்து, கீழே தூக்கி வந்தனர். இது ஒருபுறம் எனில், சுயநினைவு திரும்பிய மோனிஷாவிற்கு முதலுதவி அளித்து அசுவாசப்படுத்தி, ஆட்டோ ஒன்றில் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications