'ஆளுநர் பேசுவது அரசியலமைப்பிற்கே எதிரானது..' இந்தியாவை இந்து நாடு என்ற ஆளுநர்! கனிமொழி பதில்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆய்வுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி, ஆளுநர் பேச்சு தொடர்பாக சில பரபர விமர்சனங்களை முன்வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மண்டல ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை
முன்னதாக கல்லூரி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வேளாண்மைத் துறை சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், அங்கு வேளாண்மை சார்ந்த பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டது. இதனையும் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் மற்றும் அப்பகுதி எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றனர்.

கனிமொழி
இந்தக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., "வேளாண்மைக்கு எனத் தனியாக பட்ஜெட் வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை இப்போது திமுக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே விவசாயம் தான் ஆணிவேர். கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டது. அப்போது நாட்டில் எல்லா துறைகளும் முடங்கிப் போனது. நாட்டு மக்களும் வீடுகளிலேயே முடங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

விவசாயிகள்
ஆனால், அப்போதும் கூட மூடப்படாத ஒரே துறையாக விவசாய துறை இருந்தது. கொரோனா லாக் டவுன் போது மூடப்படாத ஒரே துறை விவசாயத் துறை தான். விவசாய துறை அந்தளவுக்கு முக்கியமானது. விவசாயிகளின் பிரச்சனைகளை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகெங்கும் இப்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அனைத்து உலக நாடுகளும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் நாம் விவசாயிகளை தயார்ப்படுத்த வேண்டும்.

நடவடிக்கை
விவசாய ஆராய்ச்சியில் நாம் முன்னோடியாக உள்ளோம். நாம் தொடர்ச்சியாக புதிய பயிர்களை கண்டுபிடித்து வருகிறோம். தமிழகத்தில் விவசாயம் என்பது மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக உள்ளது. விவசாயிகளின் கோர்க்கையைக் கேட்டு, அதைக் கவனமாகப் பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பனைப் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது" என்றார்.

ஆளுநர் விவகாரம்
இந்தியா சனாதனம், இந்து நாடு என்று ஆளுநர் பேசி வருவது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, "இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை இந்து நாடாகப் பார்க்கவில்லை. அரசியல் சாசன சட்டத்தில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லை. அரசியல் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகவே பார்க்கிறது. அரசியல் சட்டத்திற்கு எதிராக யாரும் பேசுவது நல்லதல்ல" என்று அவர் தெரிவித்தார்.

மோதல்
தமிழ்நாட்டில் இப்போது ஆளுநர் ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை என்று திமுகவினர் புகார் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் கூட மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications