அது பாட்டுக்கு வருது.. ராமநாதபுரம் கடலில் அந்த வித்தியாசமான உருவம்.. நரிப்பையூர் பீச்சில் பரபரப்பு
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடலில் இப்போதுதான் ஒரு பரபரப்பு முடிந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் மற்றொரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்றாகும்.. கடந்த 7-ம்தேதி அமாவாசை என்பதால், திருச்செந்தூர் கோயில் கடல் உள்வாங்கியது... அப்போது கடலுக்குள் இருந்த பாறைகள் எல்லாம் வெளியே தெரிந்தன.

திருச்செந்தூர்: இதனிடையே நேற்று முன்தினம், திருச்செந்தூர் கடலில் ஜெல்லி மீன்கள் ஏராளமாக கரை ஒதுங்கின.. அவைகள் பார்ப்பதற்கு கண்ணாடி பளபளவென இருந்தாலும், ஆபத்து நிறைந்த விஷத்தன்மை கொண்ட மீன்கள் என்கிறார்கள். மனிதர்களின் உடலில் பட்டாலே, தோல் உரியக்கூடிய அளவுக்கு விஷத்தன்மையாம். அதனால், திருச்செந்தூர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது..
இதோ இப்போது நரிப்பையூர் கடலில் இன்னொரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது நரிப்பையூர் மீனவ கிராமம். அதாவது ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாயல்குடி அருகில் உள்ளது இந்த நரிப்பையூர்..
கடைகோடி கிராமம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கடைக்கோடியில் இருக்கின்ற கடலோர பகுதி இதுவாகும்.. இங்கு மீன் பிடித்தல் மற்றும் பனைத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து உள்ள நிலையில், அரசுக்கு சொந்தமான கடல் நீரைக் குடிநீராக மாற்றும் ஆலை இங்குதான் செயல்பட்டு வருகிறது.
இந்த நரிப்பையூர் கடற்கரை பகுதிகளில் சில சமயம் அரியவகை பொருட்கள் கரைஒதுங்கி பரபரப்பை தந்துவிடும். இப்படித்தான், ஒருமுறை அரியவகை சூரிய மீன் (Sun Fish) உயிருடன் கரை ஒதுங்கி மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது.
திமிங்கலம்: 50 கிலோ எடையும், 6அடி நீளமும், 5 அடி உயரமும் காணப்பட்ட இந்த சூரிய மீன்கள் பாறைகளில் சிக்கி காயம்பட்டு கரை ஒதுங்கியிருந்தன.. இந்த சூரிய மீனுக்கு வாய் சிறிதாக இருக்கும்.. துடுப்புகள் முன்புறம் இருக்கும்.. ஒருநாளைக்கு சராசரியாக 25 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் நீந்தும். தனியாகவே வாழக்கூடிய மீன் இதுவாகும்..
அதுமட்டுமல்ல, மீன் இனத்திலேயே ஒரே நேரத்தில் 3 கோடிக்கும் மேல் முட்டையிடக் கூடிய மீன் இதுவாகும்.. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற ஆழ்கடல் பகுதியில்தான் இந்த மீன்கள் இருக்குமாம்.. அப்படியிருக்கும்போது, நரிப்பையூர் கடற்பகுதியில் கரைஒதுக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு அந்த மீனை பிடித்துக் கொண்டுபோய், ஆழ்க்கடல் பகுதியில் மீனவர்கள் விட்டுவிட்டார்கள்.
நரிப்பையூர்: இதோ இப்போதும் நரிப்பையூர் கடற்கரை பகுதியில், திடீரென திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கிவிட்டது.. அங்கிருந்த பொதுமக்கள் இந்த திமிங்கலத்தை பார்த்து பதறிப்போய்விட்டார்கள்.. பிறகு மீனவர்கள் தந்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி வன உயிரின சரகத்தை சேர்ந்த அலுவலர்கள் அந்த திமிங்கலத்தை பார்வையிட்டனர்.
பிறகு சிறிது நேரத்தில், அந்த திமிங்கலத்தை கொண்டுபோய் மீண்டும் விட்டார்கள்.. ஆனால், அந்த திமிங்கலம் கடலுக்குள் செல்லாமல், கரை பகுதிக்கே வந்துவிட்டது. கரையிலேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.. அப்போதுதான் தெரிந்தது, அதே கடற்கரை பகுதியில், மேலும் 2 திமிங்கலங்கள் சுற்றி சுற்றி வந்தன..
ஆழ்கடல்கள்: பின்னர், வேட்டை தடுப்பு காவலர் செல்வம் என்பவர் கடலுக்குள் நீந்தியபடியே, திமிங்கலத்தை வழிகாட்டி அழைத்து சென்றார். அந்த திமிங்கலம் பின்னாடியே, மற்ற 2 திமிங்கலங்களுடன் ஆழ்கடலை நோக்கி சென்றன..
இந்த திமிங்கலம் வித்தியாசமானது.. அதாவது, "பிக்மி கில்லெர் வேல்" என்ற வகையை சார்ந்த திமிங்கலமாம்.. இதுபோன்ற திமிங்கலங்கள், இந்தியாவில் இது மிகவும் அரிது என்கிறார்கள்..
பரபரப்பு: எனினும், திமிங்கலங்கள் மறுபடியும் கடற்பகுதிக்கு வருகின்றனவா? என்று அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications