ஸ்ரீவைகுண்டத்தில் பயங்கரம்.. பட்டப்பகலில் பயணிகள் முன்பு பஸ்சில் போன பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டப்பகலில் ஓடும் பஸ்சை வழிமறித்து 11 ஆம் வகுப்பு மாணவரை சரமாரியாக ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் கண்முன்னே இந்த சம்பவத்தை பார்த்து துடிதுடித்து போயினர். அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் அருகே பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 11 ஆம் வகுப்பு மாணவர் தேவேந்திரன் என்பவர் பயணம் செய்தார். பள்ளிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்து நிறுத்தியது. அப்போது திபுதிபுவென வந்த 3 பேர் கும்பலினர் மாணவர் தேவேந்திரனை பஸ்சில் இருந்து கீழே தரதரவென இழுத்து சென்றனர்.

மற்ற பயணிகள் பலரும் கத்தி கூச்சலிட்டனர். எனினும் அசராத அந்த கும்பலினர் மாணவரை கீழே இறக்கி, மற்ற பயணிகள் கண் முன்பே மாணவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். மாணவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் கத்தி கூச்சலிட்டு அலறினர். இதையடுத்து அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து மாணவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக மாணவரை அந்த கும்பலினர் வெட்டியுள்ளனர் என்று கூறினர்.
கபடி போட்டியின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே அந்த கும்பலினர் மாணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். நடு ரோட்டில் பஸ்சில் சென்ற பள்ளி மாணவரை 3 பேர் கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications