ஆளு பார்க்க தான் இப்படி.. செய்ற வேலையெல்லாம் மோசம்! மாணவிகளை மதுகுடிக்க வைத்த பென்சிங்! வேறு முகம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்துச் சென்ற மாணவிகளுக்கு மதுவை குடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதோடு அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் பென்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பென்சிங் கடந்த சில ஆண்டுகளாகவே பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாகவும் தனக்கு ஒத்துழைக்காத மாணவிகளை பொதுவெளியில் திட்டுவது அடிப்பது என தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து முன்னாள் மாணவிகளிடம் புகார் பெறும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பென்சிங். இவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்க கூடாது என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளியில் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் மாவட்ட கல்வி அலுவலர் உள்பட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உடற்கல்வி ஆசிரியர் பென்சிங் தலைமறைவானார்.
பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, கல்வி அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கோவையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு விரைந்து சென்று, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பென்சிங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்ஸோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்தை மறைத்த பள்ளியின் முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி, செயலாளர் சையது முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பென்சிங், சார்லஸ் சார்லஸ் ஸ்வீட்லி, சையது முகமது ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் பென்சிங் குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வழக்கமாக பள்ளிக்கூடங்களிலேயே ஆசிரியர் பென்சிங் மாணவிகளிடம் சில நேரங்களில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் தனக்கு ஒத்துழைக்காத மாணவிகளை பொதுவெளியில் திட்டுவது அடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாது முன்னாள் மாணவிகளிடமும் பென்சிங்கின் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது மாணவிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், முன்னாள் மாணவிகளிடம் இருந்தும் புகார் வரலாம் என்கின்றனர் போலீசார். எனவே ஆசிரியர் பென்சிங்கால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் யாருக்கும் பயப்படாமல் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications