TN Election Exclusive: திருச்செந்தூர் தொகுதி நிலவரம் என்ன? அமைச்சரை எதிர்க்கும் அதிமுக வேட்பாளர் யார்?
தூத்துக்குடி: திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிபெற்று வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து, அதிமுக கூட்டணியில் யார் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான ஒரு தொகுதியாகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழும் திருச்செந்தூரில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இவரை எதிர்த்து கடந்த தேர்தல்களில் நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் போட்டியிட்டு தோல்வியை மட்டுமே தழுவியுள்ளனர்.

இந்த நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணனை தேர்தலில் வீழ்த்த வியூகங்கள் அமைத்து வரும் அதிமுக தலைமை, அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டது. பெண்கள் தொழில்முனைவோர் சங்கத் தலைவியான கிருஷ்ணா ராதா, விஜயகுமார் உள்ளிட்ட பலரும் அதிமுக சார்பில் திருச்செந்தூரில் களம் காண ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்களுக்கு பதில் புது முகத்தை களத்தில் இறக்கும் திட்டத்தில் இருக்கிறதாம் அதிமுக தலைமை. அந்த வகையில் ஆறுமுகநேரியை சேர்ந்த கிருஷ்ணா ராதா எம்.எல்.ஏ. சீட் ரேஸில் முந்துகிறார். இவரது கணவர் தொழிலதிபராக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
கடந்த மூன்றாண்டுகளாக சொந்த ஊரான ஆறுமுகநேரியிலேயே தங்கி தொகுதி முழுவதும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணாராதா. பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி, கல்லூரி மாணவிகளுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி என நடத்தி தொகுதிக்குள் ஓரளவுக்கு பெண்கள் மத்தியில் கிருஷ்ணராதா பரிச்சயமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனிடையே மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் மூலம் எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிட வேண்டும் என விஜயகுமாரும் முயற்சித்து வருகிறாராம். இதற்கு மத்தியில் ஆன்மிக தலம் அமைந்துள்ள தொகுதியான திருச்செந்தூரை பாஜகவும் தன் பங்குக்கு கேட்டு வருகிறது. திமுக சார்பில் மீண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுவதால் அவரை எதிர்க்க நாங்கள் தான் சரியாக இருப்போம் என எண்ணுகிறதாம் அதிமுக தலைமை.












Click it and Unblock the Notifications