முக அழகிரி மகனுக்கு தொடர் சிகிச்சை.. துரை தயாநிதி எப்படி இருக்கிறார்? மீண்டும் நேரில் போன ஸ்டாலின்
வேலூர்: அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக்குறைவால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தற்போது அரசியலில் இருந்து விலகி உள்ளார். மு.க.அழகிரியின் மகன் பெயர் துரை தயாநிதி. இவர் தொழில்அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் தான் துரை தயாநிதி திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திடீரென வீட்டில் துரை தயாநிதி மயக்கமடைந்தார்.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அடைப்பை சரிசெய்வதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து துரை தயாநிதியை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதற்கிடையே தான் கடந்த மாதம் 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துரை தயாநிதியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வேலூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத் ரட்சகன் ஆகியோருக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச வேலூர் சென்றார். அப்போது தான் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனை சென்று துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் தான் துரை தயாநிதிக்கு தற்போது வேலூர் மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையில் அவர் இன்று 55வது நாள் சிகிச்சையை பெற்று கொண்டார். இந்நிலையில் திடீரென்று முதல்வர் ஸ்டாலின் இன்று வேலூர் சென்று மருத்துவமனையில் துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் துரை தயாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை பற்றி முதல்வர் ஸ்டாலின் டாக்டர்களிடம் கேட்டு கொண்டார். டாக்டர்கள் சிகிச்சை முறைகளை முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கினர். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அண்ணன் மு.க.அழகிரி இடையே மனஸ்தாபம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் பொதுவெளியில் அதிகமாக பேசுவது கிடையாது.
ஆனால் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அப்படியில்லை. இவர் தனது சித்தப்பா மு.க.ஸ்டாலின், சகோதரரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர்களின் குடும்பத்துடன் தொடர்ந்து நல்லுறவை பேணி வருகிறார். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி காலை ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டார் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. ஸ்ட்ரெச்சரில்தான் சிகிச்சை பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது இருந்து துரை தயாநிதிக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications