வேலூரில் வியப்பு.. சிலிர்ப்பில் குடியாத்தம்! கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் சிதறிய தேங்காய்! பரவசம்
வேலூர்: இணையத்தில் குடியாத்தம் திருவிழாவின் போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி கொண்டிருக்கின்றன.. !!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.. வைகாசி ஒன்றாம் தேதியன்று நடைபெறும் பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவன்று, வேலூர் மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்றது.
300 ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் சிரசு பெருவிழா நூற்றாண்டுக்கு கடந்தும் நடைபெற்று வருகிறது.

பஸ் ஸ்டாண்டு: குடியாத்தம் பழைய பஸ் ஸ்டாண்டு பக்கத்திலேயே உள்ள, கௌண்டன்ய மகாநதியில் வசிஷ்ட முனிவா் இந்த நதியில் தவம் புரிந்தததாக வரலாறு உண்டு. இந்த ஆற்றை ஒட்டியிருக்கிறது புகழ்பெற்ற கங்கை அம்மன் கோவில்.. 150 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கோயிலில் வருடா வருடம் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
இந்த கோயிலுக்கு பக்கத்திலேயே சில மீட்டா் தூரத்தில் மசூதி, சா்ச் போன்றவை இருக்கும்போதும், திருவிழா சுமுகமான முறையில் நடைபெறுவது ஆகச்சிறந்த சிறப்பாக அமைந்து வருகிறது. அதுமட்டுமல்ல இந்த திருவிழாவில் அனைத்து சமூக மக்களுமே பங்கேற்பது கூடுதல் சிறப்பாகும்..
பக்தர்கள்: திருமண பாக்கியம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் ஏராளமானோர் இந்தகோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்வார்கள். இங்கு தரப்படும் தீா்த்தம் அம்மை நோயைக் குணப்படுத்தக்கூடியது..
வைகாசி ஒன்றாம் தேதி நடக்கும் இந்த சிரசு திருவிழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பார்கள்.. இந்த சிரசுவை பாா்த்ததுமே உடம்பெங்கும் பக்தர்களுக்கு புல்லரித்துவிடும். கெங்கையம்மன் திருவிழாவில், பல லட்சம் சிதறு தேங்காய்கள் உடைக்கப்படும்.. காரணம், குடியாத்தம் பகுதியில் தேங்காய் உற்பத்தி அதிகம் என்பதால்தான், கெங்கையம்மனுக்கு தேங்காய்களை காணிக்கையாகச் சாற்றி வழிபாடு நடத்துகிறார்கள்.
சிரசு: விடிகாலை 4 மணியிலிருந்து சிரசு ஊர்வலம் குடியாத்தம் பகுதி முழுக்க செல்லும்.. சிரசுவின் மீது பூக்களை வாரிஇறைத்து கொண்டே வருவார்கள்.. இந்த பூக்கள், பக்தர்கள் மீது சிதறுவதால், அவற்றை பிரசாதம் போல தங்கள் வீடுகளுக்கு எடுத்து செல்வார்கள்.
இந்த கௌண்டன்ய மகா நதிக்கரையில் கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இந்த விழாவின் 3-வது இரவு புஷ்ப பல்லக்கு, திருவிழாவின் ஹைலைட்டாகும். கூழ்ஊற்றுதல், அங்கப்பிரதட்சணம், அடிதண்டா, ஆடுகள், கோழிகள் பலியிடுதல், ஆண்கள் அம்மன் வேடம் தரித்தல் போன்ற நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றுவார்கள்.
திருவிழா: அந்தவகையில், இன்றைய தினமும் கெங்கையம்மன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள தாளம் முழங்க, அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம், கெங்கையம்மன் கோயிலில் நிறைவடைந்தது.
இந்த வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, சென்னை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர்கள்: சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு மாலைகள் சூட்டப்பட்டு, தீபாராதனை செய்தும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த திருவிழாவையொட்டி வேலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து குடியாத்தத்துக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
மகிழ்ச்சி: இந்த திருவிழாவை முன்னிட்டு கே.வி.குப்பத்தில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், நெல்லூர் கெடா போன்ற ரக ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தது. சந்தை தொடங்கிய சற்று நேரத்திலேயே 600க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகின. சிறிய ஆடுகள் ரூ.7,000 வரையும், பெரிய ஆடுகள் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விலை போகின. மொத்தமாக ரூ.20 லட்சம் மேல் வியாபாரமனதாக வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications