தேர்தலில் தி.மு.க.வினரே எனக்கு எதிராக செயல்பட்டனர்.. அவங்களுக்கு இருக்கு.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு
வேலூர்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தி.மு.க சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி வாகை சூடினாலும் இந்த வெற்றி திமுகவினருக்கு திருப்தி அளிக்கவில்லை.
ஏனெனில் பல இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்களை விட குறைந்தபட்ச ஓட்டு வித்தியாசத்திலேயே தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதுவும் கொங்கு மண்டலம் முழுவதும் மொத்தமாக கோட்டை விட்டது தி.மு.க.

திருப்தி அளிக்கவில்லை
இந்த வெற்றி தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ள முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலத்தை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கி விட்டார். இதற்காக அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தி.மு.க.வில் இணைந்த டாக்டர் மகேந்திரன் ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட உள்ளது.

வேலை செய்யவில்லை
இது ஒருபுறம் இருக்க எதிர்பார்த்த இடங்களில் தி.மு.க வெற்றி பெற முடியாமல் போனதற்கும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கும் தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக அக்கட்சியின் தொண்டர்களே சரிவர வேலை செய்யவில்லை என்பதுதான் காரணம் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதுவும் ஒரு சில வேட்பாளர்களுக்கு எதிராக தி.மு.க தொண்டர்கள் எதிராக வேலை செய்ததும் அவர்கள் தோல்வியடைய காரணமாக அமைந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.

துரைமுருகன் பரபரப்பு பேச்சு
தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று விட்டதால் இது தொடர்பான பேச்சுக்கள் ஒடுங்கி இருந்த நிலையில், தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் '' தேர்தலில் தி.மு.க.வினர் தனக்கு எதிராக வேலை பார்த்ததாக வெளிப்படையாக குற்றம்சாட்டி உள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரேஷன் கடை திறப்பு விழாவில் பேசிய துரைமுருகன் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிராக செயல்பட்டனர்
''தேர்தலில் எனக்கு குறைவாக ஓட்டு விழுந்தபோதிலும், நான் எப்போதும் தொகுதியை தேடி வருபவன். நீங்கள் ஓட்டு போட்டு இருப்பீர்கள். ஆனால் தி.மு.க.வை சேர்ந்த சிலரே எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்று உங்களை தடுத்து இருப்பார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். எதிராக செயல்பட்டவர்கள் யாரென்று எனக்கு நன்கு தெரியும். உள்ளாட்சி தேர்தல் முடிந்து இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

குறைவான வாக்குகள்
கடந்த தேர்தலில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் சுமார் 748 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மிகவும் பின்தங்கி இருந்த அவர் 17-வது சுற்றிலேயே முன்னிலையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துரைமுருகனின் அதிரடியான பேச்சின் மூலம் அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் பீதியில் உறைந்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications