சமையல் அறையில் வேலூர் சித்ரா.. முகமூடி அணிந்து பெட்ரோலை ஊற்றிய மர்ம நபர்.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொல்ல முயன்றுள்ளார். இதில் தீயில் சிக்கிய மனைவி, தப்பி ஓடிய கணவனை கட்டி பிடித்ததால், இதில் அவரும் தீயில் கருகினார். நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி டார்ச்சர் செய்த கணவனை பிரிந்த மனைவிக்கு நடந்த துயரத்தை பற்றியும் பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த வங்கனூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதாகும் பாலாஜி, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பாலாஜிக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த 32 வயதாகும் சித்ரா என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தன்ஷியா (10), திவ்யாஸ்ரீ (8) என 2 பெண் குழந்தைகள் இருக்கிறது.

இந்த தம்பதியினருக்கு இடையே திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கணவனின் சந்தேகத்தால் , அடிக்கடி கருத்து வேறுபாடு உருவாகி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. மனைவி சித்ராவின் நடத்தையில் பாலாஜி சந்தேகப்பட்டு வந்திருக்கிறார். எனினும் மனைவி சித்ரா மன உளைச்சலுக்கு மத்தியிலேயே வாழ்ந்தாராம். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த சித்ரா, கணவனை பிரிந்து, 2 பெண் பிள்ளைகளுடன் 3 வருடங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.
இந்த நிலையில் பாலாஜி தனது மனைவியை சேர்ந்து வாழ வரும்படி அழைத்திருக்கிறார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சித்ரா சமைத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்து வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை சித்ரா மீது ஊற்றியிருக்கிறார். அப்போது அடுப்பில் வேலையாக இருந்ததால் சித்ரா மீது தீப்பிடித்து மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதில் அவர் வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். மேலும் தன் மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு தப்பி ஓட முயன்றவரையும் கட்டி அணைத்துக் கொண்டு கூச்சலிட்டிருக்கிறார். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். அப்போது முகமூடி அணிந்து வந்து பெட்ரோலை ஊற்றியது சித்ராவின் கணவர் பாலாஜி என தெரிந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள். இதனையடுத்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications