பசியால் இறந்த சிறுவன் வழக்கில் திடீர் திருப்பம்.. போர்வை மூடி தூக்கிச் செல்லும் இருவர் யார்?
விழுப்புரம்: தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன் பட்டினியால் இறந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் ஒரு வீடியோ காட்சியில் இரு வடமாநிலத்தவர்கள் அந்த சிறுவனை துணியில் சுற்றி தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
விழுப்புரத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல் தெரு என்ற இடத்தில் சிவக்குமார் (45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரமாக தள்ளுவண்டியில் சலவைத் தொழில் செய்து வருகிறார்.
விழுப்புரத்தில், கடந்த 15-ஆம் தேதி விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த துணி சலவை செய்யும் வாகனத்தில், 5 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அங்கிருந்தவர்கள் எழுப்பினர்.

காவல் துறை
ஆனால் சிறுவன் அசைவில்லாமல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததில் அவர்கள் வந்து பார்த்த போது சிறுவன் பலியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிறுவனின் உடலுக்கு உரிமை கோர யாரும் வரவில்லை.

விசாரணை
இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுவன் அங்கன்வாடி மைய சீருடை அணிந்திருந்ததால் அந்த மாவட்டத்தில் உள்ள 1300 அங்கன்வாடி மையத்திற்கும் சிறுவனின் புகைப்படம் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடையாளம் காண முடியவில்லை.

சிறுவன் கொலை
இந்த நிலையில் சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும் சிறுவனின் குடலில் இரு நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லை என்றும் தெரியவந்தது. இதனால் சிறுவன் பசியால் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இரண்டு தனிப்படைகள் ஆந்திரா, கர்நாடகாவுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் சிறுவனை வடமாநிலத்தவர்கள் தூக்கி செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் சிறுவனை போர்வையில் சுற்றி தூக்கி செல்வதும் அவரது பின்னால் ஒருவர் நடந்து செல்வதும் பதிவாகியுள்ளது.

இரு வடமாநிலத்தவர்கள் யார்?
புதிய பேருந்து நிலையம் அருகில் எல்லீஸ்சத்திரம் செல்லும் சாலை மற்றும் விராட்டி குப்பம் காலி கோயில் என இரண்டு இடங்களில் குழந்தையை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. சிறுவனை தூக்கிச் செல்பவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த சிறுவனது கைவிரல் ரேகையை ஆதார் மையத்திற்கு அனுப்பி ஆதார் அட்டையுடன் ஒப்பிட்டு அடையாளம் காணும் பணியும் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications