"தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை தான்!" சி.வி.சண்முகம் சரமாரி தாக்கு
விழுப்புரம்: தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதிகள் இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
அமலாக்கத் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது குறித்து இன்று பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் குறித்தும் பேசியிருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று விமர்சித்திருந்தார். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
சி.வி.சண்முகம்: விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நடத்தப்படும் கார் பந்தயம் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "சென்னை இப்போது மழையால் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இந்த அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் பணிகளைச் செய்துள்ளதாகவும் இன்னும் மூன்று கிமீ மட்டுமே பணிகள் பாக்கி இருப்பதாகச் சொன்னார்கள்.
93% பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் மழை பெய்தால் ஒரு துளி மழைநீர் கூட தேங்காது என்றார்கள். ஆனால், இன்று ஒட்டுமொத்த சென்னையும் மழையால் தத்தளிக்கிறது. மருத்துவமனைகளில் மழை நீர் தேங்கியுள்ளது, சாலைகளிலும் பாதிப்பு இருக்கிறது. இதைக் கவனித்துச் சரி செய்ய வேண்டிய முதலமைச்சரும் அமைச்சரும் அதிகாரிகளும் கார் பந்தயத்திற்குக் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
கார் பந்தயம்: திராவிட மாடல் அரசு மக்களைக் கவனிக்காமல் பார் பந்தயத்தை நடத்துகிறார்கள். வரும் 8ஆம் தேதி நடத்தும் இந்தப் போட்டிக்கு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் வரும் நாட்களில் புயல் வெள்ளம் ஏற்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கவனிக்காமல் கார் ரேஸை நடத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள்.
அதிலும் ஒமந்தூரர் மருத்துவமனை அருகே உள்ள சாலை, அண்ணா சாலை, பாதுகாப்புத் துறை அலுவலகம் இருக்கும் இடங்கள், துறைமுகம் செல்லும் சாலைகளில் இந்த ரேஸை நடத்துகிறார்கள். அதற்காக மட்டும் 242 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். நமது வரிப் பணத்தை எடுத்து இதற்குச் செலவு செய்கிறார்கள். நன்றாக இருக்கும் சாலைகள் மீது மீண்டும் சாலை போடுகிறார்கள். இவை அனைத்தும் வெறும் அந்த 6 நாட்களுக்காக. மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவி செய்யாத தமிழ்நாடு அரசு கார் பந்தயம் நடத்தக் கவனம் செலுத்துகிறார்கள்.
ரகசிய உறவு: அமைச்சர் உதயநிதிக்காகவே இந்தப் போட்டியை நடத்துகிறார்கள். இதுவரை தமிழ்நாட்டிலேயே இது தொடர்பாக யாரும் கருத்து கூறச் சொல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே இந்த விவகாரத்தில் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கில் கார் பந்தயத்திற்காக மத்திய அரசு சார்பில் 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். எனவேதான் நான் பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளதால் தொடர்ந்து கூறி வருகிறேன்.
காஞ்சிபுரத்தில் மாணவர்கள் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அதை இடித்து ஆதாரங்களை மறைத்துள்ளனர். நீலகிரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியையே கைவிலங்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகச் செய்திகளில் வெளியாகி இருக்கிறது. இது உலகில் எங்கும் நடக்காத கொடூரம்.
ஆவின் பால்: ஏழைகள் பயன்படுத்தும் ஆவினில் மேஜிக் பாலை நிறுத்திவிட்டு, இந்த தமிழ்நாடு அரசு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் கார் பந்தயம் தேவையில்லை. கார் ரேஸ் பணக்காரர்களின் விளையாட்டு சாமானியர்களின் விளையாட்டு இல்லை. இதை நடத்த வேண்டாம் எனச் சொல்லவில்லை. இதற்காக இருங்காட்டுக்கோட்டையில் உள்ள டிராக்கில் நடத்திட்டு போகலாம். ஆனால், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் ஏன் நடத்துகிறார்கள்.
தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு! அமலாக்கத்துறை அதிகாரி கைது விஷயத்தில் அண்ணாமலை ஆவேசம்!
தமிழ்நாட்டில் மணல் குவாரியில் ஊழல் நடந்துள்ளது. இங்கே சுமார் 4000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சொல்லியுள்ளது. இந்த நேரத்தில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் குற்றம் யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஆனால், இது நடக்கும் நேரம் தான் சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது.
மெச்சூரிட்டி இல்லை: தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதிகள் இருப்பதாக அண்ணாமலை சொல்கிறார். அதுதான் அதிசயமாக இருக்கிறது. அவரையே அவர் சொல்லிருக்கிறார் போல.. தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி அண்ணாமலை தான். சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்" என்று தாக்கி பேசினார்.












Click it and Unblock the Notifications