கோவில் கட்டினால்.. ராமரை கும்பிட்டால்.. சோறு வந்துடுமா? பாஜகவை சரமாரியாக விமர்சித்த சிவி சண்முகம்
விழுப்புரம்: கோவில் கட்டினால் மூன்று வேளையும் சோறு வந்துடுமா?, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அண்ணாமலை கூறுவது பித்தலாட்ட வேலை என்று அதிமுகவின் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்தது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து பாஜகவும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலுக்கு தயாராக அரசியல் கட்சிகள் வேகம் எடுத்துள்ளன. என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கும் அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்தால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்தை அதிமுகவின் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சிவி சண்முகம் கூறியதாவது:- பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என்று. கேட்கிறவர் கேணை என்றால் எதை வேண்டுமானாலும் சொல்வார். வீட்டுக்கு ஒரு அரசு வேலையாம். இன்றைக்கு அரசு ஊழியர்களே மொத்தம் 11 லட்சம் பேர் தான். 11 முதல் 12 லட்சம் அரசு வேலைகள் தான் உள்ளது. அரசு வேலையே அவ்வளவு தான் உள்ளது. அப்போ வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் எத்தனை பேருக்கு கொடுக்க வேண்டும்.
மொத்தம் 2 கோடியே 74 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. அப்போது அண்ணாமலை சொல்கிற மாதிரி எத்தனை பேருக்கு அரசு வேலைகள் கொடுக்க வேண்டும். 2 கோடியே 74 லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். எங்கடா இது கடல்லே இல்ல. வடிவேல் ஒரு படத்தில் ஜாமீன் கேட்பாறுல்ல.. அப்போ ஜாமீன் கடல்லே இல்லை என்பாங்களே.. அது போல் 2 கோடியே 74 லட்சம் வேலை எங்கே இருக்கிறது. சொல்லுங்க.. யாரை ஏமாற்ற பார்க்குறீங்க.. என்ன பித்தலாட்ட வேலை இது..
கோவில் கட்டினால்.. ராமரை கும்பிட்டுவிட்டால் மூன்று வேளையும் சோறு வந்துடுமா.. இன்றைக்கு உணர்வுகளை தூண்டி, உணர்ச்சியை தூண்டி மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். மாநில அரசாகட்டும்.. மத்திய அரசாகட்டும்.. இரண்டு அரசுமே மக்களை உணர்ச்சியை தூண்டி, உணர்வுகளை தூண்டி.. மக்களின் உண்மையான, அடிப்படை பிரச்சினைகளை மூடி மறைத்து வாக்கு வங்கிக்காக நாடகமாடிக்கொண்டு இருக்கிறது.
இன்னும் 4 அல்லது 5 நாட்களில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். 5 ஆண்டு ஆகுது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் என்றைக்காவது இங்கே வந்திருக்காறா?.. புயல், வெள்ளம், கொரோனா 2 வருஷம், எதுக்காவது வந்திருக்காறா.. ஒரு ஆறுதலாவது சொல்லியிருக்கிறாரா? இவ்வாறு சிவி சண்முகம் பேசினார்.












Click it and Unblock the Notifications