விக்கிரவாண்டியில் கௌதம் சிகாமணி? செங்கோட்டை டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை..ரிவர்ஸ் கியர் போடும் பொன்முடி?
விழுப்புரம்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரே வாரத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட கௌதம சிகாமணியை அமைச்சர் பொன்முடி இந்த தேர்தலில் களம் இறக்கலாம் என கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தபோது தான் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்த போதும் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி புகழேந்தி காலமானார். அவரது மரணத்தை தொடர்ந்து அந்த தகவலை தமிழ்நாடு சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது.
இதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த தொகுதியில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 14ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் வேட்பாளர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்களின் முதல் இடத்தில் மறைந்த எம்எல்ஏ புகழேந்தியின் மகனான செல்வகுமார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விக்கிரவாண்டி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், விவசாய அணி துணைச் செயலாளரான அன்னியூர் சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் ஆகியோரும் இந்த போட்டியில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்த தகவல் படி விழுப்புரத்தில் பலம் பொருந்திய அமைச்சராக இருக்கும் பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியை வருகின்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. இது தொடர்பாக விழுப்புரம் திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, கடந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் கௌதம சிகாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த தேர்தலில் பல வாரிசு வேட்பாளர்கள் களத்தில் இறங்கி இருந்தனர். ஆனால் இந்த தேர்தலில் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட சில வாரிசு வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கௌதம சிகாமணிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தலைமை மீது பொன்முடி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விழுப்புரத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெறுவதற்கு பொன்முடியின் ஆதரவும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தனது மகன் கௌதம சிகாமணியை களம் இறக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே பொன்முடி மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் தீர்ப்பு வேறு மாதிரி வந்தால் தனது மகனை அமைச்சர் ஆக்கிவிடலாம் எனவும் அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த தேர்தலில் அவரை களம் இறக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
விழுப்புரத்தை பொருத்தவரை திமுகவில் பொன்முடி எடுப்பதுதான் முடிவு என்றாலும் சில சர்ச்சைகள் காரணமாக திமுக தலைமை அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மக்களவைத் தேர்தல் வெற்றியை பரிசளித்திருக்கும் பொன்முடி அதனை சுட்டிக்காட்டி எம்எல்ஏ தேர்தலில் தனது மகனுக்கு வாய்ப்பை பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
