நம் குடும்ப பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்றேன்.. செளமியா அன்புமணி கேட்கவில்லை.. ராமதாஸ்!
விழுப்புரம்: தங்களது குடும்ப பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று செளமியாவிடம் கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் போது என்னிடம் கெஞ்சி கூத்தாடி செளமியாவை வேட்பாளராக அறிவித்தார்கள் என்று கூறிய ராமதாஸ், செளமியா தன் பேச்சிற்கு எதிர்மாறாக செயல்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் மீண்டும் அடுத்த உச்சத்தை எட்டி இருக்கிறது. பாமகவில் நிலவி வரும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போதும், இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரவில்லை.

செளமியா அன்புமணி தோல்வி
இதனிடையே தனது மருமகள் செளமியா அன்புமணி தேர்தலில் போட்டியிட்டதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் செளமியா போட்டியிட்டு தோல்வியடைந்தார். தர்மபுரி தொகுதியில் செளமியா அன்புமணி போட்டியிட்டதில் கொஞ்சம் கூட தனக்கு விருப்பமில்லை என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் பேட்டி
இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி செல்லும் போது, அப்பா கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என அன்புமணி கூறினார். விமானத்தில் சென்னை திரும்பும் போது, தவறாக கூறி இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றார்.. 2 சொட்டு கண்ணீர்விட்டேன்.. அது விமானத்தின் தரையில் விழுந்தது.
அன்புமணியின் எண்ணம்
7 ஆண்டுகளுக்கு முன்பாகவே பாமகவை கைப்பற்றும் எண்ணம் அவருக்கு இருந்தது. அன்புமணியை கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க மாட்டேன். இந்த தேர்தல் முடிந்த பின், எல்லாம் அவரின் கைகளுக்கு தான் செல்ல போகிறது. என்னை தலைவராக ஏற்பது மட்டுமே அன்புமணி முன் இருக்கும் ஒரே தீர்வு என்று தெரிவித்தார்.
தலைவரானது எப்படி?
தொடர்ந்து செளமியா அன்புமணி குறித்து பேசுகையில், பாமக தலைவராக அன்புமணி எப்படி வந்தார் என்பது சிலருக்கு தெரியும்.. சிலருக்கு தெரியாது. இந்த விவகாரத்தால் மகாபலிபுரம் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் தங்கி இருந்தேன். அதனையறிந்த செளமியா, அங்கு வந்து மாமா என்றார்.. நான் ஏமா என்றேன்.. மண்டபம் பார்த்துவிட்டேன்.. தலைவரை மாற்றிவிடலாம்..
பெண்கள் அரசியலுக்கு வேண்டாம்
ஓய்வறியா உழைப்பாளி ஜிகே மணியை மாற்றிவிடலாம் என்றார். இதன்பின் ஜிகே மணியிடம் பேசுகிறேன் என்றேன்.. பின் ஒன்றரை மாதத்திற்கு பின் அன்புமணியை தலைவராக ஆனந்த கண்ணீர் வடித்து தேர்ந்தெடுத்தோம். அப்போது பேசும் போது, என் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிக்கோ, அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறினேன். ஆனால் இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும்.
வாரிசு கிடையாது
அரசியலில் வாரிசு என்பதே கிடையாது. என்னிடம் கெஞ்சி கூத்தாடி வாதாடி தர்மபுரியில் செளமியா போட்டியிட்டார். தர்மபுரியில் முதலில் தான் நிற்பதாக கூறிய அன்புமணி, பின்னர் செளமியா நிற்பதாக கூறினார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வேண்டாம் என்று கூறியதற்கு எதிர்மாறாக செயல்பட்டார். அவர் உழைக்க தயாராக இல்லை என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications