விறுவிறு விக்கிரவாண்டி தேர்தல்! துண்டை போட்ட திமுக.. அவசரம் காட்டாத அதிமுக! பாயுமா? பதுங்குமா? பாமக
விழுப்புரம்: ஜூலை 10ஆம் தேதி நடக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் களமிறங்குவது உறுதியாகி இருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக நாளை அக்கட்சியின் கூட்டம் தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியாகின. பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்திருக்கிறது. அதில் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியும் அடங்கும்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: தற்போது தான் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் அவசரம் அவசரமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் உடனடியாக வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைமை அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அன்னியூர் சிவா: கடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் தான் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அங்கு திமுகவே தனது வேட்பாளரை களம் இறங்குகிறது. அன்னியூர் சிவா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட செயலாளர்கள் மாற்றமும் அரங்கேறி இருக்கிறது.
களமிறங்கும் திமுக: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதல் கட்சியாக திமுக தனது வேட்பாளரை உடனடியாக அறிவித்திருப்பது மற்ற கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த தேர்தலில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியலில் பல்வேறு பெயர்கள் அடிபட்ட நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் கடந்த தேர்தலில் தோற்ற வருமான முத்தமிழ்செல்வன் மீண்டும் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது .
திமுக உற்சாகம்: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் 2021 சட்டசபை தேர்தலிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து தங்களுக்கு வெற்றி உறுதி என திமுக கூட்டணி கட்சியினர் சொல்லி வருகின்றனர். விரைவில் பிரசாரத்தை தொடங்க இருக்கும் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
நாம் தமிழர்: இந்த நிலையில் இந்த தேர்தலிலும் நான்கு முறை போட்டி நிலவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது . திமுக அதிமுக போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் போட்டியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீண்டும் களம் இறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் வேறு சிலரது பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி முடிவை எடுப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாமக போட்டி?: இதற்கிடையே பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தலில் களம் இறங்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம் விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகமாக இருக்கிறது. எனவே அதனை குறி வைத்து பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிடலாம் என கூறப்படுகிறத. ஈரோடு இடைத்தேர்தலில் பண பலமும் ஆளுங்கட்சியின் செல்வாக்கு காரணமாக தேர்தலை பாமக புறக்கணித்த நிலையில் தற்போது களமிறங்கும் என கூறப்படுகிறது.
நாளை கூட்டம்: இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக நாளை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு கூட்டம் தைலாபுரத்தில் உள்ள கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் இறுதியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுமா என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம்..












Click it and Unblock the Notifications