கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல்
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், விக்கிரவாண்டியில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 64 பேர் போட்டியில் உள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி லோக்சபா தேர்தலுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக போட்டியில்லை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இந்த தொகுதியில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளராக சி. அன்புமணி போட்டியிட உள்ளார். இதேபோல் நாம் தமிழர் கட்சியும் இதில் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
64 பேர் வேட்புமனு தாக்கல்: இதேபோல் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவும் இங்கு போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. இதனால், விக்கிரவாண்டி தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததால் மைக் சின்னத்தில் சீமான் கட்சி போட்டியிட்டது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி வேட்பு மனு தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைந்தது. இன்றுடன் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 64 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீமதியின் தாய் செல்வி போட்டி: இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர் கூறியதாவது:- ஒரு 2 வருட காலமாக எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு கொடுமைகளை அனுபவித்து இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தால் முடியாது.
அதிகாரமும் இருக்க வேண்டும். அது இருந்தால் தான் நிறைய மக்களுக்கு நாம் சேவை செய்ய முடியும். என்னுடைய முழு நோக்கமே மக்களுக்கு சேவை செய்யனும். நான் பட்ட துயரைத்தை மக்களும் படக்கூடாது என்ற முழு நோக்கத்தோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு மடிப்பிச்சையாக கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜீலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நியமித்து அப்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் ஏராளமானோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications