விழுப்புரத்தில் வீடுகள் இடிப்பு.. ரயில்வே நிலத்தில் 100 வருடம் வசித்தாலும் பட்டா கிடைக்காது.. ஏன்?
விழுப்புரம் :விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் 44 குடும்பத்தினர் வீடு கட்டி கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இதுவரை பட்டா கிடைக்கவே இல்லை.. அதே நேரம் அவர்களது வீடுகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அடியோடு இடித்து அகற்றப்பட்டது. இந்த ரயில்வே ஆக்கிரமிப்பை பொறுத்தவரையில் என்ன சிக்கல் என்றால், மற்ற நிலங்களை போல் இல்லை, 100 வருடங்கள் ஆனாலும் பட்டா வாங்கவே முடியாது. அந்த நிலம் தலைமுறை தலைமுறையாக வசித்தாலும் ஆக்கிரமிப்பு நிலமாகவே கருதப்படும்.
விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக 44 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். இவர்கள் வசித்து வந்த இடம் ரயில்வேக்கு சொந்தமான இடம் ஆகும். ரயில்வே இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்து வந்தார்கள். இந்த வீடுகளுக்கு 75 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கல் வந்ததது. அனுமதியின்றி குடியிருப்புகள் கட்டியுள்ளதாகவும், அந்த குடியிருப்புகளை அகற்றுமாறும் திருச்சி கோட்ட ரயில்வே சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த குடியிருப்புகளை அகற்றுமாறு கடந்த 5.1.2024 அன்று உத்தரவிட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களிடம் தாங்களாகவே முன்வந்து வீடுகளை காலி செய்யுமாறு தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீசு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள், தங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டார்கள்
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இறுதியில், மேற்கண்ட 44 பேருக்கும் திருப்பாச்சனூர் பகுதியில் தலா 3 சென்ட் அளவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அத்துடன் 3 மாத காலத்திற்குள் கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சூழலில் அக்டோபர் 8-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டுமெனவும், தவறும்பட்சத்தில் ரயில்வே நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் மற்றும் ரயில்வே அதிகாரிகளும் அங்கு 6 பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து காலை 8 மணியளவில், பொக்லைன் எந்திரங்களின் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. அங்குள்ள குடியிருப்புகளில் இருந்த பொருட்களை வீட்டில் இருந்து எடுப்பதற்கு கூட நேரம் தராமல், அந்த ஊழியர்களே பொருட்களை எடுத்து வெளியே வைத்து விட்டு அவசர, அவசரமாக வீடுகளை இடித்து அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை தங்கள் கண் முன்னே இடித்து அகற்றுவதை பார்த்த பொதுமக்கள், வேதனை தாங்க முடியாமல் அதே இடத்தில் உருண்டு, புரண்டு கண்ணீர் மல்க கதறி அழுதார்கள். அதேநேரம் வீடுகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. 44 வீடுகளையும் அகற்றும் பணிகள் மதியம் 1.30 மணி அளவில் முடிந்தது. அதன் பிறகும் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
பொதுவாக ரயில்வே இடங்களில் குடியிருப்பவர்கள், என்னதான் நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்தி 100 வருடம் வசித்தால் கூட பட்டா வாங்க முடியாது. ஏன் இன்றைக்கு பத்திரப்பதிவு கூட செய்ய முடியாது.. அந்த நிலத்தை யாருக்குமே விற்க முடியாது.. புதிதாக யாரும் வாங்க முடியாது என்கிற நிலையில், ரயில்வே ஆவணங்களின்படி, யார் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறாரோ, அவருக்கு கருணை அடிப்படையில் இலவச வீட்டு மனை பட்டா, தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அத்துடன் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஒப்புதல் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு நாளும் ரயில்வே இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படாது. எனவே யாராவது ரயில்வே இடத்தை உங்களுக்கு தந்தால் வாங்கி ஏமாற வேண்டாம்.












Click it and Unblock the Notifications