ஆளுநர் ஆர்என் ரவி தங்கிய வளாகத்தில் 200 சவரன் நகை கொள்ளை.. விருதுநகரில் என்ன நடந்தது? திடுக் தகவல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி நேற்று தங்கியிருந்த வளாகத்தில் 2 வீடுகளில் நுழைந்த கொள்ளையர்கள் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விருதுநகர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியையொட்டி ஆளுநர் ஆர்என் ரவி சாத்தூர் அருகே ஆர்ஆர் நகரில் உள்ள வளாகத்தில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்த வளாகத்தில் உள்ள 2 வீடுகளில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்த வளாகத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலையின் 2 துணை மேலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பெயர்கள் பாலமுருகன் மற்றும் ராமச்சந்திரன் ஆகும்.
இதில் மெக்கானிக் பிரிவில் துணை மேலாளராக பாலமுருகன் பணியாற்றி வருகிறார். நிர்வாக பிரிவு துணை மேலாளராக ரமாச்சந்திரன் செயல்பட்டு வருகிறார். இவர்கள் 2 பேரும் வெளியூர் சென்ற நிலையில் அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மொத்தம் 200 சவரன் தங்கநகைகளை கொள்ளையர்கள் தூக்கி சென்றுள்ளனர்.
இருப்பினும் இந்த கொள்ளை சம்பவம் எப்போது நடந்தது? என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்தபோது நடந்ததா? இல்லாவிட்டால் ஆளுநர் ஆர்என் ரவி அங்கு இல்லாதபோது நடந்ததா? என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதோடு 2 வீடுகளில் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்த வளாகத்தில் உள்ள 2 வீடுகளில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications