கிராமசபை கூட்டம்.. கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்.. பாய்ந்தது ஆக்ஷன்
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் விவசாயியை ஊராட்சி செயலாளர் காலால் எட்டி உதைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை சஸ்பெண்ட் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டுள்ளார்.
காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கிராம மக்களின் கோரிக்கைகளை அறிந்து அவர்களின் குறைகளை களையவும் கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள் தங்களது பகுதியில் உள்ள கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். இந்த நிலையில் தான், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார் குளம் ஊராட்சி கங்கா குளம் பகுதியில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்பகுதி அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.
பொதுமக்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி அம்மையப்பர் என்பவரும் கலந்து கொண்டார். இவர் சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர், ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியனை மாவட்ட ஆட்சியர் மாற்றி நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. ஏன் மீண்டும் ஊராட்சி செயலாளர் இங்கு வந்துள்ளார் என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன், விவசாயி அம்மையப்பரை காலால் எட்டி உதைத்தார். ஊராட்சி செயலாளருக்கு ஆதரவாக கூட்டத்தில் இருந்த மற்றொரு நபரும் விவசாயியின் கன்னத்தில் பலமாக அறைந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். ஊராட்சி செயலாளர் காலால் எட்டி உதைத்ததில் காயம் அடைந்த விவசாயி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் கூறி வந்ததாகவும் இதனால் வேறு கிராம ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விவசாயி அம்மையப்பரை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் இடைநீக்கம் செய்யப்பட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, தங்கபாண்டியனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications