ராமர் பாலத்தை நிரூபிக்க முடியவில்லை.. சேதுசமுத்திர திட்டத்தை தடுத்தவர் ஜெயலலிதா.. கி.வீரமணி பேச்சு!
ராமர் பாலத்தை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்: ராமர் பாலத்தை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக சேதுசமுத்திர திட்டத்தை ஜெயலலிதா, சுப்பிரமணியன் சாமி மற்றும் சோ ராமசாமி ஆகியோர் தடுத்து நிறுத்தியதாகவும் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் எதிரே திராவிடர் கழகம் சார்பில் ஈரோடு முதல் கடலூர் வரை சமூகநீதி திராவிட மாடல் விளக்க தொடர் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி மற்றும் சிபிஎம், சிபிஐ, மதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கி.வீரமணி பேச்சு
இந்தப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி பேசுகையில், அடிக்க அடிக்க பந்துபோல எழும்புவது தான் இந்த இயக்க,ம். எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்த இயக்கம் தான் இந்த திராவிட இயக்கம். எந்த கொம்பன் வந்தாலும் இந்த அணியை அசைக்க முடியாது. எல்லா பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. சமூக நீதிக்கு எதிரான புத்தகம் மனு தர்மம். இங்கு எல்லோரையும் கடவுள்களை பயமுறுத்தி நம்ப வைத்துள்ளார்களே தவிர அறிவுப்பூர்வமாக நம்ப வைக்கவில்லை.

ஜாதி சாவதில்லை
சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடும் போது, நாம் அனைவரும் 100 சதவிகிதம் படிக்கவில்லை, நீதிக்கட்சி வரும் முன்னர் 100க்கு 8 பேர் மட்டுமே படித்த நிலையில், தற்போது 80 பேர் படித்துள்ளனர். அதற்கு காரணம் பெரியார் தான். பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்றால் ஒரே ஜாதி ஏன் இல்லை? இறந்தால் தொல்லை இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் மனிதன், இறந்த பின்னரும் தொல்லை தொடர்கிறது. இறந்த பிணத்திற்கு முன்பாகவும் ஜாதி நிற்கிறது. மனிதன் தான் சாகிறானே தவிர, ஜாதி சாவதில்லை.

பெண்கள் பாதுகாப்பு
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் பல பதவிகளில் பெண்கள் உள்ளனர். மற்ற வடமாநிலங்களில் இந்த நிலை இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் விடுவதில்லை. தமிழ்நாட்டில் 50 சதவிகிதம் பெண்கள் நகர சபை தலைவராக இருப்பதற்கு பெயர் தான் திராவிட மாடல். இந்தியாவில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நீதிமன்றத்திலேயே கூறுகிறார். அதுதான் திராவிட மாடல்.

சேதுசமுத்திர திட்டம்
மத்திய அரசால் இன்று வேலைவாய்ப்பை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், 100 ஆண்டுகளுக்கு முன்பே வேலைவாய்ப்புக்காக தொடங்கப்பட்டது தான் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் வெற்றிபெற்றால் திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெயர் சென்றுவிடும் என்று ஜெயலலிதா, சுப்பிரமணியன் சாமி மற்றும் சோ ராமசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு போட்டு அதை தடுத்துவிட்டனர்.

ராமர் பாலம்
இதற்கு ராமர் பாலம் என்ற நம்பிக்கையை முன் வைத்தனர். ஆனால் இன்று வரை அறிவியல்பூர்வமாக அவர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. எனவே தான் மீண்டும் சேதுசமுத்திர திட்டத்தை தொடங்கி தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் இயற்றினார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications