1000 ரூபாயை விடுங்க.. அதிமுக ஆட்சியில் எல்லா பெண்களுக்கும் மாதம் ரூ.2500.. மாஜி அமைச்சர் ஒரே போடு!
விருதுநகர்: அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 2500 வழங்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போது ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உறுப்பினர்களின் உரிமை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் அதிமுகவினருக்கு உறுப்பினர் உரிமை அட்டை வழங்கினார் ராஜேந்திர பாலாஜி.

அதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வென்றுவிட்ட அகம்பாவத்தில் ஆணவத்தில் திமுகவினர் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர். டெல்லிக்கு செல்லலாம், கூச்சல் போடலாம், பக்கோடா சாப்பிடலாம். ஆனால் எதையும் சாதிக்க இயலவில்லை. முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு நிதி வாங்கி கொடுக்க முடியாத 40 எம்பிக்கள் இருந்தால் என்ன மாடு மேய்க்கப் போனால் என்ன?
அதிமுக பாஜகவுக்கு அடிபணிந்து செல்கிறது என கூறும் திமுகவினர் ஏன் டெல்லியில் நிமிர்ந்து நின்று போராடி நிதியை வாங்கி தர முடியவில்லை? 40 பேர் சென்று ஒரு திட்டத்திற்கு கூட நிதி வாங்க வக்கு இல்லாத துப்பு இல்லாத கட்சி திமுக. அந்தக் கட்சிக்கு மக்கள் யாரும் இனி வாக்களிக்க மாட்டார்கள். மின்சார கட்டணம் சொத்து வரி உயர்வு குறித்து காரணம் கேட்டால் மத்திய அரசு பணம் ஒதுக்கவில்லை என திமுக கூறுகிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிமுக நான்காக பிளவுபட்டது என்று திமுகவினர் கூறுகிறார்கள். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அதுதான் அதிமுக. சிலருக்கு கண்மாயில் கெண்டை மீனும் கெளுத்தி மீனும் சிக்கியது போல் திமுகவுக்கு 40 எம்பிக்களும் மாநிலத்தில் ஆட்சியும் அமைந்துவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கார்டு உள்ள அனைத்து பெண்களுக்கும் பாகுபாடு இன்றி மாதம் ரூபாய் 2500 வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியிருக்கிறேன். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆர், தொட்டில் குழந்தை திட்டம் என மகத்தான திட்டத்தை கொண்டு வந்த அம்மா ஆகிய இருவரின் கலவையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
தற்போது அதிமுக சரியான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நமது ஏவுகணை சரியாக குறி வைத்து இலக்கை நோக்கி தாக்கும். அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி. விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றி அதிமுகவின் எஃகு கோட்டையாக மாற்றுவோம் எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications