ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி!
வாஷிங்டன்: இந்தியர்கள் அனைவரும் அமெரிக்காவுக்குப் போய் ஐடி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் தான் வேலை பார்ப்பார்கள். ஆனால், பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு டீக்கடை நடத்தி வருகிறாராம். யார் அந்த இளைஞர்.. அவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
வாழ்க்கை எப்போதும் நாம் திட்டமிட்டபடி அமைவதில்லை. எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுவது சகஜம். அப்படி ஒரு சுவாரசியமான சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த ஒருவர் லாஸ் ஏஞ்சல்ஸின் ஒரு உழவர் சந்தையில் தேநீர் மற்றும் அவல் போஹா விற்று வருகிறார். அவரது கதை இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

யார் இவர்!
பிரபாகர் பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ள இவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராம். இவர் இப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் இந்திய உணவு வகைகளை விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். உள்ளூர் உழவர் சந்தைகளில் தனது கடையை அமைத்து, அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் சூடான தேநீரையும், போஹாவையும் வழங்குகிறார். இவரது கடைகளில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அமெரிக்காவில் ஒரு பீகார் இளைஞர் ஒரு சிறிய உணவகத்தை நடத்துவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில், சாய்காய் என்ற தனது பக்கத்தில் கடையின் போட்டோ மற்றும் வீடியோக்களை பிரபாகர் பிரசாத் பகிர்ந்து வருகிறார். அங்கு அவருக்கு 10,000-க்கும் மேற்பட்ட பலோயர்ஸ்கள் உள்ளனர்.
ஒரு டீ ரூ.780
அமெரிக்காவில் இவர் ஒரு கப் டீயை 8.65 அமெரிக்க டாலருக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹780க்கு விற்கிறார். அதேபோல போஹாவை 16.80 அமெரிக்க டாலர், அதாவது சுமார் ₹1,350க்கு விற்கிறார். இந்திய ரூபாய் மதிப்பில் இது அதிகமாகத் தெரிந்தாலும், அமெரிக்காவில் ஒப்பிடுகையில் இது வழக்கமான ரேட் தான். வாடிக்கையாளர்கள் இவரது உணவை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பெரும்பாலான நாட்களில் அவரது பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடுகிறதாம்.
சில வீடியோக்களில், பிரசாத் உழவர் சந்தையில் வாடிக்கையாளர்களுடன் பண்டமாற்று முறையைப் பாலோ செய்வதும் தெரிகிறது. அதாவது பணத்திற்குப் பதிலாக, சில சமயம் காய்கறிகள் அல்லது பூக்களை வாங்கிக் கொண்டு, அதற்குப் பதிலாக டீயை கொடுக்கிறார். அப்படி தான் ஒரு வீடியோவில், ஒருவருக்கு டீயை கொடுத்துவிட்டு, புதினா மற்றும் எலுமிச்சைப் பழங்களைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்.
பீகார்
தனது ஆரம்பக்கால வாழ்க்கையைப் பற்றிப் பேசிய பிரசாத், பீகாரில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பர்ஹ் என்ற சிறிய நகரம் தான் இவரது சொந்த ஊராம். அவரது குழந்தைப் பருவத்தில் குடும்பம் கடுமையான நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது. குளிர்காலத்தில், குளிரைத் தாங்க கம்பளிகள் இல்லாததால், சில சமயங்களில் அரிசி மற்றும் பருப்பு மூட்டைகளின் கீழ் தூங்கியதாக அவர் தெரிவித்தார்.
அவரது தந்தை பல சிறு தொழில்களைச் செய்தும், அவை வெற்றி பெறவில்லை. இருப்பினும், கல்விக்கே குடும்பத்தில் முக்கியத்துவம் இருந்தது. பிரசாத் இந்தி வழிப்பள்ளியில் படித்து, சிறந்த மாணவரானார். படிப்புடன், கிரிக்கெட் விளையாட்டிலும், பாடுவதிலும் ஆர்வம் காட்டினார். அப்போது தான் ஒரு சமயம் அவரது சகோதரனைக் கடத்த முயற்சி நடந்துள்ளது. இது அவரது வாழ்க்கையை திடீரென மாற்றியது. இந்த கடத்தல் முயற்சிக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் பீகாரை விட்டு போபாலுக்கு குடிபெயர்ந்தது
ஐஐடி படிப்பு
பிரசாத்திற்கு இந்த மாற்றம், குறிப்பாகப் பள்ளியில், மிகவும் கடினமாக இருந்தது. பீகார் மாநில பாடத்திட்டப் பள்ளியிலிருந்து ஆங்கில வழி சிபிஎஸ்இ பள்ளிக்கு மாறியபோது, அவருக்கு மொழியைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பள்ளியில் பெரும் சவால்களை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். காலப்போக்கில், அவர் கடுமையாக உழைத்து தன் படிப்பில் முன்னேறி இருக்கிறார்.
இறுதியாக, அவர் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, 2008-ல் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் கார்ப்ரேட் வாழ்க்கை அவருக்குத் தேவையான மனத் திருப்தியைத் தரவில்லை. இதனால் ஜிம்மில் அதிக நேரம் செலவிட்டார். இது அவரை மும்பையில் மாடலிங் வாய்ப்புகளை நோக்கி ஈர்த்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, தனது காதலி வசித்து வந்த அமெரிக்காவிற்குச் செல்ல முடிவு செய்தார். அவரது விசா இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட பின்னர், அவர் இறுதியாக 2014ஆம் ஆண்டு வாக்கில் டெக்சாஸ் சென்றார். அங்கு எம்பிஏ படித்துள்ளார்.
டீக்கடை
அமெரிக்காவில் அவருக்கு வேறு விதமான சவால்கள் இருந்தன.. பிரசாத் கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தாலும் பல முறை வேலை இழந்தார். அப்படியொரு முறை வேலையிழந்தபோது தான், அவருக்கு பிரேக்அப் ஆகியுள்ளது. மேலும், அப்போது, உடல்நலப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். அந்த காலகட்டத்தில் யாருமே தனக்கு இல்லை என பிரசாத் உணர்ந்துள்ளார். அந்த இக்கட்டான சூழலில் அவருடன் இருந்தது டீ தானாம்.. இதனால் வேலையிழந்தபோது அவர் டீ விற்க ஆரம்பித்தாராம். அது நல்ல வரவேற்பைத் தரவே இப்போது வரை மகிழ்ச்சியாக அதையே செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications