இந்திய அரசுக்கு சம்மன் அனுப்பிய அமெரிக்க நீதிமன்றம்.. மத்திய வெளியுறவு அமைச்சகம் பரபர கருத்து!
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் தொடர்ந்த சிவில் வழக்கில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவு அமைப்பான 'ரா'வின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல் உள்ளிட்டோருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமையை பெற்றுள்ள இவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவால் பயங்கரவாதி என கடந்த 2020-ல் அறிவிக்கப்பட்டவர் பன்னுன்.

இவர் தன்னைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள தெற்கு மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க சிவில் நீதிமன்றம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவு அமைப்பான 'ரா' முன்னாள் தலைவர் சமந்த் கோயல் மற்றும் ரா ஏஜெண்ட் விக்ரம் யாதவ் ஆகியோருக்கும் தொழில் அதிபர் நிகில் குப்தாவுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
அது மட்டும் இன்றி 21 நாளில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகளுக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் அனுப்பப்பட்டு இருக்கும் சம்மன், மத்திய அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்து ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:- காலிஸ்தானி பயங்கரவாதி தொடர்ந்த சிவில் வழக்கில் இந்திய அரசுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது முற்றிலும் தேவையற்ற ஒரு நடவடிக்கை. இந்த விவகாரம் எங்கள் கவனத்திற்கு முதலில் வந்ததும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எங்கள் பார்வை எதுவும் மாறவில்லை.
அந்த நபர் யாரென்று அனைவரும் அறிந்ததே. சட்ட விரோத அமைப்பை நடத்துகிறார். இந்த அமைப்பு இந்திய இறையாண்மைக்கு எதிராக பல்வேறு சட்ட விரோத செயல்களுக்கு காரணமாக இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கடந்த நவம்பரில் இங்கிலாந்தை சேர்ந்த ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்றில், அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை வைத்து இருக்கும் பன்னுனை கொலை செய்ய நடைபெற்ற முயற்சியை அமெரிக்கா முறியடித்தது எனவும் ஜோ பைடன் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் இதனை உறுதி செய்தனர் என்றும் கூறியிருந்தது.
இது தொடர்பாக முதலில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சகம், இந்திய அதிகாரிகளை தொடர்பு படுத்தி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கவலைக்குரிய விஷயம். இது அரசின் கொள்கைகளுக்கு முரணானது எனவும் நாங்கள் கூறியிருக்கிறோம்" எனக் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications