வங்கதேசத்தை மோடியே பார்த்து கொள்வார்.. முகமது யூனுஸை கலங்க வைத்த டொனால்ட் டிரம்ப்.. பின்னணி என்ன?
வாஷிங்டன்: இந்தியாவுடன் வங்கதேசம் மோதி வருகிறது. இதற்கு அங்கு நடந்த ஆட்சி மாற்றமே காரணம். இதுபற்றிய கேள்விக்கு வங்கதேசத்தின் ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. வங்கதேசத்தின் விவகாரத்தை பிரதமர் மோடியே பார்த்து கொள்வார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையில் அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுடன் வங்கதேசம் மோதி வருகிறது. குறிப்பாக எல்லை பிரச்சனையை கிளப்புகிறது. அதேபோல் நமக்கு எதிரியாக உள்ள பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகிறது.
இதுதவிர இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நபர்களை வங்கதேச இடைக்கால அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசிவருகின்றனர். இது நம் நாட்டுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. இருப்பினும் தற்போது வரை வங்கதேசத்துக்கு நம் நாடு எந்த பதிலடியும் கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார்.
நம் நாட்டின் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு பிரதமர் மோடி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் இருநாடுகள் இடையேயான உறவு, வர்த்தகம் தொடர்பான விவகாரங்கள் பற்றி விரிவாக விவாதித்தனர். அதன்பிறகு இருதலைவர்களும் பத்திரிகையாளர் சந்திப்பை மேற்கொண்டனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம், வங்கதேச விவகாரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இந்திய பத்திரிகையாளர் ஒருவர், ‛‛வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உள்ளார். அங்கு நடந்த ஆட்சி மாற்றம். முகமது யூனுசை ஜூனியர் சோரஸ் (இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பெரும் பணக்காரரான ஜார்ஜ் சோரஸ் மகன் அலெக்ஸ் சோரஸ்) சந்தித்தது உள்ளிட்டவற்றை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛வங்கதேசத்தின் விவகாரங்களில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. இந்த விவகாரத்தை பிரதமர் (மோடி) நீண்ட காலமாக கையாண்டு வருகிறார். பல நூறாண்டுகளாக இதில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் இது புதிது இல்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இதுபற்றி படித்து வருகிறேன். இதனால் வங்கதேச விவகாரத்தை பிரதமரிடமே விட்டு விடுகிறேன்'' என்று கூறினார்.
இதன்மூலம் வங்கதேசத்துக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய மெசேஜை பாஸ் செய்துள்ளார். அதாவது வங்கதேச விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு எதுவும் இருக்காது. இனி வங்கதேசத்தை பிரதமர் மோடியே பார்த்து கொள்வார். வங்கதேசத்தை பொறுத்தவரை எதை செய்ய வேண்டுமோ? அதனை மோடியே பார்த்து கொள்வார்கள் என்பதை தான் டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தி உள்ளதாக சொல்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
மேலும் தற்போதைய இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ள முகமது யூனுஸ், டொனால்ட் டிரம்பின் எதிரியான ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் மற்றும் அவரது கணவரும், அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான பில் கிளின்டன் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2016 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டன் தான் போட்டியிட்டார். அப்போது ஹிலாரி கிளின்டனுக்கு, முகமது யூனுஸ் நன்கொடைகள் வழங்கியிருந்தார். இதனால் அடிப்படையிலேயே முகமது யூனுஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே உறவு சிக்கல் உள்ளது.
இதுதவிர கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தபோது அதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக குற்றச்சாட்டு ஒன்று வந்தது. அப்போது அதிபராக டொனால்ட் டிரம்ப் இல்லை. அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தான் ஆட்சியில் இருந்தார். ஹிலாரி கிளின்டன், பில் கிளின்டன் ஆகியோர் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான். இதனால் தான் அமெரிக்கா உதவியுடன் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இப்படியான குற்றச்சாட்டுக்கு நடுவே தான் வங்கதேச விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை. வங்கதேசத்தை இனி மோடியே பார்த்து கொள்வார் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‛‛வங்கதேசம் குறித்து இருதலைவர்களும் விவாதித்துள்ளனர். பிரதமர் மோடி தனது கருத்துகளையும், அதன் செயல்பாடு குறித்த கவலைகளையும் பகிர்ந்து உள்ளார். வங்கதேசத்தின் நிலை என்பது அவர்களுக்கு ஆக்கப்பூர்வமானது, அதேவேளையில் நிலையான உறவுகளை தொடரும் வகையில் நம்முடன் சேர்ந்து நகரும் என்று நம்புகிறோம். ஆனாலும் சில கவலைகள் உள்ளன. இதுபற்றி பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் டிரம்புடன் பகிர்ந்து கொண்டுள்ளார்'' என்று கூறியுள்ளார். இதனால் வங்கதேச விவகாரத்தில் பிரதமர் மோடியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications