டிக்டாக்கை வாங்கும் எலான் மஸ்க்? டொனால்ட் டிரம்ப் காட்டிய பச்சை கொடி.. சீனாவுக்கு விழும் அடி
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை அதிபர் டொனால்ட் டிரம்ப் 75 நாட்கள் நீக்கி உள்ளார். அமெரிக்கருக்கு டிக்டாக் நிறுவனத்தின் 50 சதவீத பங்கை விற்பனை செய்ய வேண்டும் என்று கண்டிஷனுடன் இந்த தடை நீக்கத்தை அவர் செயல்படுத்தி உள்ளார். இந்நிலையில் தான் டிக்டாக்கை எலான் மஸ்க் வாங்க டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
டிக்டாக் செயலி என்பது சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் (ByteDance) எனும் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்தியாவில் அதிகமானவர்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்தினர். ஆனால் இந்தியா - சீனா இடையேயான பிரச்சனையில் டிக்டாக் த செயலியை மத்திய அரசு நம் நாட்டில் தடை செய்துள்ளது.

இது டிக்டாக் நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியது. மத்திய அரசு விதித்த தடையால் நம் நாட்டில் டிக்டாக் செயலியை யாரும் பயன்படுத்தவில்லை. இதன்மூலம் அந்த நிறுவனத்துக்கான வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிற நாடுகளில் டிக்டாக் செயலி பயன்பாட்டில் இருக்கிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலி பயன்பாட்டில் உள்ளது. அங்கு மொத்தம் 170 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது மொத்தம் 1.70 கோடி பேர் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அங்கும் டிக்டாக் செயலி பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது.
அதாவது டிக்டாக் செயலி மூலம் அதன் சொந்த நிறுவனம் அமெரிக்கர்களின் டேட்டாக்களை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலன் கருதி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டம் அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் இயற்றப்பட்டதோடு, முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஒப்புதலும் வழங்கினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் டிக்டாக் செயலியை அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது என்ற நிலை உருவானது. அமெரிக்காவில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் டிக்டாக்கை டவுன்லோட் செய்யும் வசதி மறைந்து போனது. ஆனால் புதிதாக தேர்வாகி பொறுப்பேற்றுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் டிக்டாக் செயலிக்கான தடையை 75 நாட்கள் தற்காலிகமாக நீக்கி உள்ளார்.
இதற்கான கோப்பில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின் கடந்த 20ம் தேதி கையெழுத்திட்டார். அதோடு டிக்டாக் செயலி நிறுவனத்தின் பங்கில் 50 சதவீதத்தை அமெரிக்கரிடம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் 75 நாட்களில் டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று கண்டிஷன் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் நேற்று கூறியதாவது: நான் டிக்டாக் நிறுவனத்தின் உரிமையாளர்களை சந்தித்து இருக்கிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால் அந்த செயலியின் 50 சதவீத பங்குகளை அமெரிக்கா வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். டிக்டாக் செயலியை டெஸ்லாவின் சிஇஓவான எலான் மஸ்க் வாங்க விரும்பினால் ஆதரவு அளிப்பேன்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் டிக்டாக் செயலி எலான் மஸ்க் வசம் செல்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் டிக்டாக் செயலியை வாங்க எலான் மஸ்க்கிடம் சீன அதிகாரிகள் முதற்கட்டமாக சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் Bloomberg செய்தி வெளியிட்டது. இதனை டிக்டாக் நிறுவனம் முற்றிலுமாக மறுத்தது. இந்நிலையில் தான் டிக்டாக் செயலியை எலான் மஸ்க் வாங்க நினைத்தால் ஆதரவு அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் டிக்டாக் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அதில், ‛‛டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற நடவடிக்கைக்கு நான் நீண்டகாலமாக எதிராக இருக்கிறேன். ஏனென்றால் இது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தற்போது அமெரிக்காவில் டிக்டாக் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் சீனாவில் எக்ஸ் வலைதளத்தை நடைமுறைப்படுத்த அனுமதியில்லை. இந்த விஷயத்தில் சீனா சமரசமாக செயல்படவில்லை'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே நல்ல உறவு உள்ளது. உலகின் பெரும் பணக்காரராக உள்ள எலான் மஸ்க் தான் டெஸ்லா சிஇஓவாக உள்ளார். அதேபோல் எக்ஸ் வலைதள பக்கத்தின் உரிமையாளராகவும் உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலரை அவர் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க்கை தன்னுடன் வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்றதும் DOGE எனப்படும் அரசாங்க திறன் துறையின் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோரை டொனால்ட் டிரம்ப் நியமித்தார். இதில் விவேக் ராமசாமி அந்த பொறுப்பில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் எலான்மஸ்க் மட்டும் அதன் தலைமை பொறுப்பில் நீடிப்பார். இந்த DOGE என்பது அரசு துறை முறைகேடு மற்றும் தேவையில்லாத செலவுகளைக்கும் கண்காணித்து அதனை தடுக்கும் பணியை செய்ய டொனால்ட் டிரம்ப்பால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இப்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான நெருக்கம் இருக்கும் சூழலில் அவர் டிக்டாக்கை வாங்கினால் ஆதரவு அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. அதோடு சீனாவின் தயாரிப்பான டிக்டாக் அமெரிக்கர் கைக்கு செல்வதால் இது அந்த நிறுவனத்துக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications