தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. சம்பவக்காரர் டிரம்ப் தான் எல்லாத்துக்கும் காரணம்
வாஷிங்டன்: தங்கத்தின் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பல்வேறு உலகளாவிய காரணங்கள் இருக்கிறது என்றாலும், அமெரிக்கா தான் தங்கம் என்ன விலையில் விற்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் நாடாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது பொருளாதாரக் கொள்கைகளை, உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கவனித்து வருவதன் காரணமாக தங்கம் விலையில் இன்று பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம் என்பது உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் முதலீடு செய்வதற்கான அட்சய பாத்திரமாக இருக்கிறது. இந்த உலகில் எங்கு என்ன பிரச்சனை என்றாலும், அந்த நாடுகள் முதலில் ஓடிப்போய் வாங்கிவைப்பது தங்கத்தை தான்.. வடிவேலு பட பாணியில் சொல்வது என்றால், ஆபத்து வரும் போது, தங்கபெட்டியை திறந்து பார்க்கலாம்.. அது நிச்சயம் காப்பாற்றும்.. அதுதான் நிதர்சனமாக உள்ளது. அதேநேரம் தங்கம் என்பது வங்கியில் போடும் பணம் போல் பாதுகாப்பாக இருக்கும் என்றாலும், அதைவிட கூடுதல் லாபம் தரும் விஷயங்கள் கிடைத்தால் மக்கள் விடமாட்டார்கள்..

அப்படி தங்கத்தை போல் அதிக லாபம் தருவதாக அமெரிக்க டாலர்கள் உள்ளன. அமெரிக்காவின் பொருளாதார வலிமையே அதற்கு காரணம். அந்த வகையில் டாலரை வலுப்படுத்த புதிய அதிபராகும் டிரம்ப் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் வலுவாக உள்ளது. இதன் காரணமாக தங்கத்தில் இருந்து கணிசமான பங்குகள், சட்டென அமெரிக்க பங்குச்சந்தையில் அதிகமாவதால், சட்டென தங்கம் விலை கணிசமாக குறைகிறது. அமெரிக்காவில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அப்படியே திருப்பமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகரிக்கும். இதுதான் நடைமுறையில் உள்ள விஷயம் ஆகும்.
அந்த வகையில் அண்மையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் அளவிற்கு இரண்டாவது முறையாக குறைத்தது. பொதுவாகவே வட்டி விகித குறைப்பு என்பது தங்கத்தின் விலை தான் அதிகரிக்கும். ஆனால் அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதன் காரணமாக தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. திங்களன்று தங்கத்தின் விலை 2%க்கும் அதிகமாக சரிந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்கா அரசின் நிதிக் கொள்கை மற்றும் வட்டி விகிதக் குறைப்பு போன்றவை ஒருபுறம் எனில். டொனால்ட் டிரம்பின் வெற்றிதான் தங்கத்தின் விலை சரிவுக்கு காரணமாக உள்ளது-
கடந்த வாரம் இதே நாளில் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வான மறுநாளே தங்கம் விலை இதுவரை இல்லாத சரிவினை ஒரே நாளில் சந்தித்தது. இது ஒருபுறம் எனில், பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் உட்பட அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் இந்த வாரம் நிதி நிலை குறித்து பேச உள்ளனர், அதே நேரத்தில் அமெரிக்க நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர் விலை குறியீட்டு தரவு, வேலையின்மை மற்றும் சில்லறை விற்பனை புள்ளிவிவரங்கள் ஆகியவை இந்த வாரம் வெளிவர இருக்கிறது. இதுவும் தங்கத்தின் விலை குறைய காரணிகளாக உள்ளன.
எல்கேபி செக்யூரிட்டீஸ் நிதி நிறுவன ஆய்வாளர் ஜதீன் திரிவேதி கூறும் போது, "டாலரின் மதிப்பு உயர்வது தங்கம் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ட்ரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்கப் பத்திரங்களின் விலைகள் அதிகரித்துள்ளதும் தங்கம் விலை குறைவுக்கு காரணமாக உள்ளது" என்றார்.
கோடக் செக்யூரிட்டீஸ் ஏவிபி-கமாடிட்டி ரிசர்ச் கெய்னட் செயின்வாலா கூறும் போது, "டிரம்பின் தேர்தல் வெற்றி மற்றும் குடியரசுக் கட்சியின் வெற்றிகரமான முயற்சியைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்க பங்கு சந்தைகளின் பக்கம் கவனம் திரும்பியது. இதனால் தான் தங்கம் விலை ஒரு மாதத்தில் இல்லாத அளவாக ஒரு அவுன்ஸ் $2,650.30 ஆக குறைந்தது. அதேநேரம் பெடரல் வங்கி திடீரென வட்டி குறைப்பு செய்ததன் காரணமாக தங்கம் ஒரு அவுன்ஸ் $2,700க்கு மேல் உயர்ந்தது. எனினும் டாலரின் மதிப்பு வலுவாக உள்ளது மற்றும் முதலீட்டாளர்களின நம்பிக்கை போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையில் ( $2,617.15) பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்றார்.
தங்கத்தின் விலை சென்னையில் ஒரு கிராம் 135 ரூபாய் குறைந்து 7085 ரூபாய்க்கு விற்பனையாகிறது.. ஒரு சவரன் தங்கம் 1080 ரூபாய் குறைந்து 56680க்கு விற்பனையாகிறது. நவம்பர் மாதம் பிறந்ததில் இருந்து பார்த்தால் இன்று தான் மிக குறைந்த விலையில் விற்கப்படுகிறது. நவம்பர் 4ம் தேதி 58960 ரூபாய் ஆக விற்கப்பட்ட தங்கம் நவம்பர் 7ம் தேதி அதிரடியாக சரிந்து 57600க்கு வந்தது. ஆனால் அடுத்த நாளே அதாவது நவம்பர் 8ம் தேதி அன்றே சட்டென ஏறி 58280ஆக உயர்ந்தது. அதன்பிறகு 58200க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், நேற்று 57760க்கு விற்பனையானது. இன்று ஒரு சவரன் தங்கம் விலை அதிலும் குறைந்து 56680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications