திடீர் பதற்றம்.. துப்பாக்கியுடன் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் நுழைய முயன்றவர் கைது!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் திடீரென ஒருவர் ஃப்ளேர் துப்பாக்கி மற்றும் டார்ச்சுடன் நுழைய முயன்றுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக வல்லரசாக அறியப்படும் அமெரிக்காவில் இப்போது அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை இந்த அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

டிரம்ப்: இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மறுபுறம் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முதலில் இதில் கமலா ஹாரிஸுக்கு முன்னிலை இருப்பதாகவே சொல்லப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க போட்டி மிக கடுமையானதாக மாறியது. கடைசிக்கட்ட கருத்துக்கணிப்புகள் எல்லாமே கடும் போட்டி நிலவுவதாகவே சொல்லப்பட்டது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தல் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். புளோரிடா மாகாணத்தில் பாம் பீச்சில் உள்ள வாக்குச் சாவடியில் டிரம்ப் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், குடியரசு கட்சியினர் ஆர்வமாக வாக்களித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், தேர்தல் நியாயமாக நடந்து அதில் தான் தோல்வி அடைந்தால் ஒப்புக்கொள்வேன் என்ற அவர், தற்போது வரை தேர்தல் நியாயமாக நடப்பது போலவே தெரிவதாகவும் குறிப்பிட்டார்.
கைது: இதற்கிடையே அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் கட்டிடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃப்ளேர் துப்பாக்கி மற்றும் டார்ச்சுடன் அடையாளம் தெரியாத நபர் நுழைய முயன்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க கேபிடல் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். அந்த நபர் மீது எரிபொருளின் வாசனை வீசியதாகவும், துப்பாக்கி மற்றும் ஃப்ளேரை கையில் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தேர்தலை முன்னிட்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள முக்கியமான கட்டிடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அங்குள்ள அதிபரின் வெள்ளை மாளிகை, நாடாளுமன்ற கேபிடல் கட்டிடங்களில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இருப்பினும், அதையும் தாண்டி இந்த நபர் நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020ல் நடந்த சம்பவம்: முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு அதிபர் தேர்தல் சமயத்தில் இதே கேபிடல் கட்டிடத்தில் தான் வன்முறை ஏற்பட்டு இருந்தது. அதாவது அந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்து இருந்தார். இருப்பினும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப் தேர்தலில் மிக பெரியளவில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார். மோசடிக்கான ஆதாரம் இல்லாத போதிலும், டிரம்ப் திரும்ப திரும்ப இதையே சொல்லி வந்தார். மேலும், மக்கள் வீதியில் வந்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
டிரம்ப் ஆதரவாளர்களும் பெரியளவில் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டகாரர்கள் திடீரென அமெரிக்க நடாளுமன்ற கட்டிடத்தில் நுழைந்தனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. சில உயிரிழப்புகளும் கூட நடந்தது. அதன் பிறகு அவசர அவசரமாக ராணுவம் களமிறக்கப்பட்டு, போராட்டகார்ரகள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications