"இந்தியாவில் மத சுதந்திரம் மிக மோசம்.." திடீரென அமெரிக்க அரசுக்கு போன ரிப்போர்ட்! பின்னணி என்ன
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் இந்தாண்டிற்கான ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் மத உரிமைகளை மீறும் வகையிலும் சிறுபான்மையினர் உரிமை மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவைக் கவனிக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துக் கண்காணிக்கச் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு உள்ளது.

இந்த அமைப்பு உலக நாடுகளில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் ரிப்போர்ட் அளிக்கும். அந்த அமைப்பு தரும் ரிப்போர்ட்டிற்கு ஏற்ப அமெரிக்க வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்கும்.
மத சுதந்திரம்: அதன்படி இந்தாண்டிற்கான ரிப்போர்ட்டை இந்த அமைப்பு இப்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா குறித்துப் பல முக்கிய கருத்துகள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதால் அதைக் கவனிக்க வேண்டிய நாடுகள் லிஸ்டில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
மதமாற்றத் தடைச் சட்டங்கள், பசு வதைச் சட்டங்கள், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் போன்ற பாரபட்சமான சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய அரசு பிற மதங்களைச் சேர்ந்தவர்களை ஒடுக்கி, கட்டுப்படுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பல ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மதத் தலைவர்கள் தன்னிச்சையாக எந்த நடைமுறையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது மத சுதந்திரத்தை மீறலின் உதாரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மத சிறுபான்மையினர்: இந்த ரிப்போர்ட்டில் மேலும், "இந்திய அதிகாரிகள் பல முறை வெறுக்கத்தக்க, இழிவான மற்றும் தவறான தகவல்களைப் பயன்படுத்தி சிறுபான்மையினர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். இது வன்முறை, கொலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் தூண்டுவதாக உள்ளன. எனவே, கடுமையான மதச் சுதந்திர மீறல்களில் ஈடுபட்டதற்காக, இந்தியாவைக் கவனிக்க வேண்டிய நாடாக அமெரிக்க வெளியுறவுத் துறை பட்டியலிட வேண்டும்.
பலர் மோசமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.. மதத் தலைவர்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டனர், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் மத சுதந்திரத்தை மீறுவதாகவே உள்ளன. குறிப்பாக மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவில் மதச் சுதந்திரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது. பல மாநிலங்களில் பாரபட்சமான சட்டங்கள், வெறுக்கத்தக்கப் பிரசாரம், மத சிறுபான்மையினரைப் பாதிக்கும் வகையிலான தேர்தல் வாக்குறுதிகள் என்று நிலைமை மோசமடைந்தது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டங்கள்: மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல். வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு, வக்பு திருத்த மசோதா, பொது சிவில் சட்டம் ஆகியவை மத சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
முதல்முறை இல்லை: அதேநேரம் இந்தியா குறித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது இது முதல்முறை இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து இந்த அமைப்பு கவலை தெரிவித்து வந்துள்ளது. இருப்பினும், இந்த அமைப்பு பக்கச்சார்பாக இருப்பதாகவும் இந்திய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளாமல் ரிப்போர்ட் கொடுப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications