டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்.. வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பா? வெளியான பகீர் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தச் சம்பவத்தில் டிரம்ப் வலது காதில் காயம் ஏற்பட்ட போதிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் உட்பட 2 பேர் இதில் கொல்லப்பட்டனர். இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்கும் நிலையில், அதில் டிரம்ப் மற்றும் பைடன் களமிறங்குகின்றனர். தேர்தலுக்கு நான்கு மாதங்களே இருப்பதால் அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

துப்பாக்கிச் சூடு: இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் வலது காதில் காயம் ஏற்பட்ட போதிலும் டிரம்ப் உயிர் பிழைத்தார். தான் நன்றாக இருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், தன்னை விரைந்து காப்பாற்றிய சீக்ரெட் சர்வீல் ஏஜெண்டுகளுக்கு நன்றி தெரிவித்தார்.
டிரம்பை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அருகே இருந்த ஒரு கட்டிடத்தின் மேல் இருந்து சுட்டதாகத் தெரிகிறது. சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனே நடத்திய பதிலடி தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. அதேபோல கூட்டத்தில் பங்கேற்ற மற்றொரு நபரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்: இதற்கிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டது பென்சில்வேனியாவை சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது எஃப்.பி.ஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேநேரம், அவர் எதற்காக இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனியாக இந்தச் சம்பவத்தைச் செய்தாரா அல்லது அவருக்கு வேறு யாராவது உதவினார்களா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இப்போது வரை இல்லை. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கமும் தெளிவாக இல்லை.. முதலில் அவரை அடையாளம் கண்டு அவரது பின்னணி குறித்து விசாரிக்கும் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
வெளிநாட்டுச் சக்திகள்: அதேநேரம் முதல்கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு வெளிநாட்டுச் சக்திகளின் தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் நாட்களில் நடக்கும் விசாரணையில் இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் தெரிய வரும்.
கடந்த கால சம்பவங்கள்: அமெரிக்காவில் அதிபருக்கு மட்டுமில்லை.. துணை அதிபர்களுக்கும் சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். அதன்படி டிரம்பிற்கும் சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு இருந்தது. அவர்கள் இந்த பேரணி நடந்த இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் முழுமையான பாதுகாப்பு சோதனைகளைச் செய்திருந்தனர். இருப்பினும், இந்த பாதுகாக்கப்பட்ட எல்லைக்கு வெளியே இருந்து அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனவே, இந்தத் தகவல்கள் எப்படித் தெரிந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அதேநேரம் அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை இல்லை. அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப். கென்னடி 1963ஆம் ஆண்டு தனது வாகன பேரணியின் போது படுகொலை செய்யப்பட்டார்.. மேலும் அவரது சகோதரர் பாபி கென்டி 1968இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த போதும் 1981இல் கொலை முயற்சி நடந்தது.. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக ரீகன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications