உப்புமாவை விடுங்க.. அவலில் இப்படி ஒரு 'புலாவ்' செய்யலாமா? 10 நிமிஷத்துல தட்டு காலியாகிடும்!
Aval Pulao Recipe in Tamil (அவல் புலாவ் செய்வது எப்படி?): புராணக் கதைகளில் கிருஷ்ணருக்குப் பிடித்தமான உணவாகக் கருதப்படும் அவல், இன்று உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த உணவாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான அவல் உப்புமாவை விட, காய்கறிகள் நிறைந்த இந்த 'அவல் புலாவ்' குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதன் செய்முறையை இன்னும் எளிமையாக இங்கே காணலாம்.

அவல் புலாவ் செய்யத் தேவையான பொருட்கள்:
l. அவல் - 2 கப்
2. எண்ணெய் - 2 ஸ்பூன்
3. பிரிஞ்சி இலை - 1
4. பட்டை - சிறிய துண்டு
5. சீரகம் - 1 ஸ்பூன்
6. வெங்காயம் - 1
7. உருளைக்கிழங்கு - 1
8. கேரட் - 1
9. பட்டாணி - அரை கப்
10. முட்டைகோஸ் - சிறிதளவு
11. பீன்ஸ் - சிறிதளவு
12. பச்சை மிளகாய்
13. மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
14. உப்பு - தேவையான அளவு
15. சர்க்கரை - 2 ஸ்பூன்
16. முந்திரி பருப்பு - ஒரு கைப்பிடி
17. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
18. கொத்துமல்லி - 1 கைப்பிடி
19. திராட்சை - 10
அவல் புலாவ் செய்முறை விளக்கம்
முதலில் அவலைச் சுத்தமான தண்ணீரில் இரண்டு முறை நன்றாகக் கழுவி, நீரை முழுமையாக வடித்துத் தனியே வைக்க வேண்டும். அவல் குழையாமல் உதிரியாக இருக்க வேண்டுமானால், கழுவிய பின் ஒரு தட்டில் பரப்பி வைப்பது நல்லது. அதன் பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். தாளிப்பு வாசனை வந்தவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் காரத்திற்குத் தேவையான பச்சை மிளகாயைச் சேர்த்து அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகிய காய்கறிகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். காய்கறிகள் அனைத்தும் மிதமான தீயிலேயே வேகுவதற்காகச் சிறிதளவு தண்ணீரைத் தெளித்து, ஒரு மூடி போட்டு சில நிமிடங்கள் காத்திருக்கவும். காய்கறிகள் வெந்தவுடன், அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர், நெய்யில் பொன்னிறமாக வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் திராட்சையை இதனுடன் சேர்த்து ஒருமுறை பிரட்டவும்.
இறுதியாக, ஏற்கனவே கழுவித் தயார் செய்து வைத்துள்ள அவலை இந்த காய்கறி கலவையில் சேர்த்துக் கிளற வேண்டும். அவல் உடைந்துவிடாதபடி நிதானமாக மசாலா மற்றும் காய்கறிகளுடன் ஒன்று சேருமாறு மென்மையாகக் கலக்கவும். அடுப்பை அணைப்பதற்கு முன்னதாக, எலுமிச்சைச் சாற்றினைச் சேர்த்து, அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரித்து இறக்கினால், மணக்க மணக்கச் சத்தான அவல் புலாவ் தயாராகிவிடும்.
இந்த அவலை கொண்டு அவல் லட்டு கூட தயாரிக்கலாம். இல்லாவிட்டால் அவலை பாலில் ஊற வைத்து அதில் சர்க்கரை சேர்த்து நன்கு ஊறியதும் சாப்பிடலாம். அவலில் நிறைய சுவை இருக்கிறது. எடையை குறைக்க நினைவோர் இந்த அவலை கையில் எடுங்க!












Click it and Unblock the Notifications